கணவருடன் கருத்து வேறுபாடு.. இன்ஸ்டாகிராமில் ஆறுதல் கூறி நெருக்கம்.. 150 பவுன் நகை, ரூ.30 லட்சம் பணத்துடன் எஸ்கேப்பான இளைஞர்!



Boy cheat jewels married women in Thiruvotriyur

கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வந்த இளம்பெண்ணிடம், இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய இளைஞர் ஆறுதல் கூறி நகை மற்றும் பணம் பெற்றதாக அளிக்கப்பட்ட புகாரில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

திருவொற்றியூரைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (29) என்பவருக்கு, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த இளம்பெண், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 மாதங்களாக அவரைப் பிரிந்து தனியாக வசித்து வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், தனது குடும்பப் பிரச்சினைகள் குறித்து ஹரிகிருஷ்ணனிடம் அந்த இளம்பெண் பகிர்ந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் ஆறுதல் கூறி, நம்பிக்கையை ஏற்படுத்தியதாகவும், இதனைத் தொடர்ந்து அந்த இளம்பெண்ணிடம் இருந்து சிறுகச் சிறுக 150 பவுன் நகை மற்றும் ரூ.30 லட்சம் பணத்தை பெற்றதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மாணவிக்கு முத்தமிட்டு ரீல்ஸ்.. ஆசிரியர் கண்டிப்பால் மாணவர் தற்கொலை.. உறவினர்கள் போர்க்கொடி.! 

இதற்கிடையே, இளம்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையிலான பிரச்சினை முடிவுக்கு வந்து, இருவரும் மீண்டும் சேர்ந்து வாழத் தொடங்கியதாக தெரிகிறது. அப்போது, இளம்பெண்ணிடம் இருந்த நகை மற்றும் பணம் குறித்து கணவர் கேட்டுள்ளார்.

இதையடுத்து, இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஹரிகிருஷ்ணனிடம் நகை மற்றும் பணத்தை கொடுத்திருப்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது. மேலும், அவற்றை திருப்பிக் கொடுக்காமல் ஹரிகிருஷ்ணன் ஏமாற்றி வந்ததாகவும் இளம்பெண் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இளம்பெண் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு ஹரிகிருஷ்ணனை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் நகை மற்றும் பணம் எவ்வாறு பெறப்பட்டது, அவை தற்போது எங்கு உள்ளன என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டுக்குள் வீசிய துர்நாற்றம்... கதவை உடைத்த போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!