“இந்த கிரகத்தை விட்டே வெளியேறணும்!” கிருத்திகா உதயநிதியின் திடீர் பதிவு… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
தமிழக அரசியல் களம் பரபரப்பாக இருக்கும் நிலையில், முன்னாள் துணை முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியும், இயக்குநருமான கிருத்திகா உதயநிதி சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள திடீர் பதிவு தற்போது பேசுபொருளாகியுள்ளது. அவரது பதிவு தற்போதைய அரசியல் சூழலுடன் தொடர்புடையதா என்ற கேள்வியும் இணையத்தில் எழுந்துள்ளது.
‘வணக்கம் சென்னை’, ‘காளி’, ‘காதலிக்க நேரமில்லை’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ள கிருத்திகா உதயநிதி, சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து தனது கருத்துகளைப் பதிவிட்டு வருபவர். குறிப்பாக, அவ்வப்போது நேரடியாகப் பொருள் கூறாமல், பல்வேறு விதமான ‘க்ரிப்டிக்’ பதிவுகளை வெளியிடுவது அவரது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த கிரகத்தை விட்டே வெளியேற ஏலியன் ஸ்பேஸ் ஷிப்பை தொடர்பு கொள்ள என்ன வழி?” எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த பதிவு விரக்தியை வெளிப்படுத்தும் வகையில் இருப்பதால், இது எதைக் குறிக்கிறது என்ற விவாதம் சமூக வலைத்தளங்களில் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: அஜித் கார் ரேஸ்… விஜய் வருகை! சில்வர்ஸ்டோனில் நடக்கப்போவது என்ன?
What is the procedure to contact an alien spaceship and get beamed out of this planet?
— kiruthiga udhayanidh (@astrokiru) September 12, 2026
தமிழகத்தில் தற்போதைய அரசியல் சூழல், திமுகவினர் நடத்தி வரும் போராட்டங்கள் உள்ளிட்டவற்றை மனதில் வைத்துதான் கிருத்திகா இந்தப் பதிவை வெளியிட்டாரா என நெட்டிசன்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், தனது பதிவுக்கான காரணம் குறித்து கிருத்திகா உதயநிதி எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதனிடையே, அவரது பதிவுக்கு விஜய் ரசிகர்கள் மற்றும் தவெக ஆதரவாளர்கள் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். சிலர் நகைச்சுவையாகவும், சிலர் அரசியல் ரீதியாகவும் கருத்து தெரிவித்து வருவதால், கிருத்திகா உதயநிதியின் இந்த ஒரு பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.