போய் செத்துத் தொலை.. கணவன் சொன்ன வார்த்தையால் விபரீத முடிவு.. 14 மணி நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீண்ட பெண்!



Suicide women saved after 14 hours in uttarpradesh

உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் பகுதியில், கணவன் கோபத்தில் கூறிய வார்த்தையால் மனமுடைந்த பெண் ஒருவர் கங்கை நதியில் குதித்து உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நிலையில், 14 மணி நேரத்துக்கும் மேலாக நீரில் சிக்கித் தவித்தும் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசம் மாநிலம் மிர்சாபூர் பரைனி கிராமத்தைச் சேர்ந்த 38 வயதான சுனிதா சஹானி என்பவருக்கும், குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வேலை செய்து வரும் சூர்யபாலி என்பவருக்கும் சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தன்று சுனிதாவுக்கு அவசரமாக மருந்துகள் வாங்க வேண்டியிருந்ததால், அதற்கான பணத்தை கணவரிடம் தொலைபேசி மூலம் கேட்டுள்ளார்.

பணம் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டதால் சுனிதா மீண்டும் கணவரைத் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், கணவர் கோபத்தில் கடுமையான வார்த்தைகளைப் பேசியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சுனிதா, சாஸ்திரி பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

இதையும் படிங்க: நள்ளிரவில் காதலன்.. விடிந்ததும் கணவன்! ஒரே இரவில் மாறிய இளம் ஜோடியின் வாழ்க்கை!

ஆனால், அப்போது கங்கை நதியில் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் உடனடியாக அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில், நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட சுனிதா சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சுனார் பகுதியை அடைந்துள்ளார். தொடர்ந்து 14 மணி நேரத்துக்கும் மேலாக நீரில் போராடியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலை சுனார் படித்துறை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த உள்ளூர் மீனவர்கள், நதியில் ஒரு பெண் மிதந்து கொண்டிருப்பதை கவனித்துள்ளனர். அருகில் சென்று பார்த்தபோது அவர் உயிருடன் இருப்பது தெரியவந்ததைத் தொடர்ந்து, உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுனிதாவின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தேவையான சட்ட நடைமுறைகளை மேற்கொண்ட பின்னர், அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பால் விபரீத முடிவை எடுத்த பெண், நீண்ட நேரத்துக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகயுள்ளது.

இதையும் படிங்க: முதல் இரவில் தொடங்கிய சந்தேகம்.. ஒன்றரை ஆண்டுக்குப் பிறகு மனைவிக்கு தெரியவந்த கணவரின் ரகசியம்!