சூனியம் வைத்ததாக சந்தேகம்.. மருமகளை கோடரியால் தாக்கிய 70 வயது மாமனார்.. நாக்பூரில் அதிர்ச்சி!



mamanar-killed-daughter-in-law-in-maharashtra

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில், மருமகள் மாந்திரீகம் செய்வதாக சந்தேகித்த 70 வயது மாமனார், அவரை கோடரியால் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே யஷோதராநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. உயிரிழந்தவர் 40 வயதான லட்சுமி ரவிசங்கர் பாலி என போலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தன்று லட்சுமி வீட்டின் பின்புறத்தில் துணி துவைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு வந்த அவரது மாமனார் நாதுலால் பாலி, மருமகள் மாந்திரீகத்தில் ஈடுபடுவதாக சந்தேகம் தெரிவித்து அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் ஆத்திரத்தில் கோடரியால் லட்சுமியை தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: கணவனை கொன்றுவிட்டு ரத்தத்தை நெற்றியில் திலகமிட்ட மனைவி.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

maharashtra

இதனிடையே, மருமகளை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நாதுலால் வீட்டின் பின்புறம் இருந்த கிணற்றில் குதித்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். லட்சுமியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட நாதுலால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாந்திரீகம் குறித்த சந்தேகம்தான் கொலைக்கான காரணமா அல்லது குடும்பத்தில் வேறு ஏதேனும் பிரச்னை இருந்ததா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே குடும்பத்தில் அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுவனிடம் அத்துமீறிய முத்தம்.. இளம்பெண் மீது பாய்ந்த வழக்கு!