யூடியூப் மூலம் இவ்வளவு வருமானமா? 8 வயது சிறுவன் படைத்த வியக்கவைக்கும் சாதனை! எவ்வளவு கோடி தெரியுமா?

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் பெருமளவில் பயன்படுத்தப்படும் வலைதளம் யூடியூப். சிறுவர்கள் கார்ட்டூன் வீடியோக்கள், மற்றும் பாடல்கள் பார்ப்பதற்கும், பெரியவர்கள் சமையல் தொடங்கித் தனது வேலையில் ஏற்படும் சந்தேகங்கள் குறித்து தெரிந்து கொள்ளஎன ஒவ்வொன்றிற்கும் யூடியூப் சேனலை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். யூடியூப் சேனல் அனைவருக்கும் மாபெரும் வழிகாட்டியாக திகழ்கிறது எனவே கூறலாம்.
இந்நிலையில் பலரும் யூடியூப் சமூகவலைதளத்தில் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் ஏராளமான பின்தொடர்பவர்களை பெற்று கோடிக்கணக்கில் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். இந்நிலையில் 8 வயது சிறுவன் ஒருவன் யூடியூப் மூலம் தற்போது 155 கோடி ரூபாய் சம்பாதித்து முதலிடத்தை பெற்றுள்ளார்.
சமீபத்தில் போர்ப்ஸ் பத்திரிக்கை 2019 ஆம் ஆண்டிற்கான யூடியுப் மூலம் அதிக வருமானம் ஈட்டுபவர்கள் குறித்த பட்டியலை வெளியிட்டது. அதில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ரியான் ஹாஜி என்ற 8 வயது சிறுவன் முதலிடத்தை பெற்றுள்ளார். அவர் 2015 ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவ்யூவ் என்ற யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார்.
அதில் அவர் குழந்தைகளுக்கான புதிய வித்தியாசமான விளையாட்டு பொருள்கள் குறித்து விளையாடிக்கொண்டே குழந்தைகளுக்கு விமர்சனம் செய்யும் வீடியோக்களை எடுத்து வெளியிட்டார். ஆரம்பத்தில் அவருக்கு பெரிய அளவில் முன்னேற்றம் எதுவும் இல்லாத நிலையில் நாளடைவில் 23 மில்லியன் பேர் பின்தொடரும் நிலைக்கு முன்னேறியுள்ளார். மேலும் யூ டியூப் மூலம் சுமார் 155 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.