தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கா.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.! - TamilSpark
TamilSpark Logo
அரசியல் தமிழகம் Covid-19

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் முழு ஊரடங்கா.? மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.!

தீவிரமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. 2 மாதங்களகாக தொடர்ந்த ஊரடங்கால், தினக்கூலிகள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பு மக்களும் வருமானம் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வந்தது. 

ஆனாலும், கொரோனா பரவல் குறையாமல் இருந்தது, குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இதைத்தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கடந்த 19ஆம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. 

சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தியதால் சென்னையில் இருந்து அதிகளவில் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பினர். இதனால், தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மதுரையில் வேகமாக பரவியதால், மதுரையிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. 

தமிழகத்தில் நேற்று ஒரு நாளில் மட்டும் 2,710 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 62,087ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் நாளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 

இந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்களும் கலந்துகொள்கின்றனர். கொரோனா பரவலை தடுக்க மேலும் பல மாவட்டங்களில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுமா? அல்லது மாநிலம் முழுவதுமே முழு ஊரடங்கு மீண்டும் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதா? என்பது இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo