கொளத்தூர் தொகுதியில் உடனே இடைத்தேர்தல் வைங்க...! MLA பாபுவுக்கு என்னாச்சு? சமூக வலைத்தளங்களில் இடைத்தேர்தல் பரபரப்பு..!!!



vs-babu-health-tvk-government-controversy

சென்னை கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு, கடந்த செப்டம்பர் 9-ம் தேதி மூச்சுத்திணறல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வரும் அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டு வருகிறது. இதற்கிடையே, எம்எல்ஏவின் நீண்டகால மருத்துவ சிகிச்சை அரசியல் ரீதியாகவும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

வி.எஸ்.பாபு உடல்நிலை குறித்து மருத்துவமனை தகவல்

சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்ட வி.எஸ்.பாபுவுக்கு பல்வேறு துறை மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது. செப்டம்பர் 15-ம் தேதி அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், செப்டம்பர் 18-ம் தேதி சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதுடன் முன்னேற்றம் காணப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. செப்டம்பர் 22-ம் தேதியும் உடல்நிலை சீராக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.

இதையும் படிங்க: சற்று முன்... மூச்சுத்திணறலால் வெண்டிலேட்டர் உதவியுடன் VS பாபுவுக்கு சிகிச்சை! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை....!!!

வெளிப்படைத்தன்மை குறித்து அரசியல் கட்சிகள் கேள்வி

இந்நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை தொடர்பாக அரசிடம் இருந்து போதுமான தகவல் வெளியாகவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் தரப்பினர் விமர்சனம் தெரிவித்துள்ளனர். மக்கள் பிரதிநிதி நீண்ட நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது உடல்நிலை மற்றும் தொகுதிப் பணிகள் தொடர்பாக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சமூக வலைதளங்களில் இடைத்தேர்தல் கோரிக்கை

இதற்கிடையே, எக்ஸ் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வி.எஸ்.பாபுவின் நீண்டகால மருத்துவ சிகிச்சையை மையமாக வைத்து பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன. சிலர் கொளத்தூர் தொகுதியில் எம்எல்ஏ இல்லாததால் தொகுதிப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, இடைத்தேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். எனினும், இவை சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் கருத்துகளாகவே உள்ளன; வி.எஸ்.பாபுவின் எம்எல்ஏ பதவி தொடர்பாக அதிகாரப்பூர்வமாக எந்த மாற்றமும் அறிவிக்கப்படவில்லை.

 

இதையும் படிங்க: கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு எப்படி உள்ளார்? மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!