கொளத்தூர் எம்.எல்.ஏ. பாபுவுக்கு கழுத்தில் துளையிட்டு டிரக்கியாஸ்டமி சிகிச்சை.... வெளியான தகவலுக்கு மருத்துவமனை அளித்த பரபரப்பு விளக்கம்..!!
கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம். ஹெல்த்கேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் கவனம் பெற்ற இவர், செப்டம்பர் 9-ஆம் தேதி இரவு ஏற்பட்ட திடீர் மூச்சுத்திணறலைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து கண்காணிப்பு
மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபுவை பல்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். தேவைக்கேற்ப செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் குழு தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: கொளத்தூர் தொகுதியில் உடனே இடைத்தேர்தல் வைங்க...! MLA பாபுவுக்கு என்னாச்சு? சமூக வலைத்தளங்களில் இடைத்தேர்தல் பரபரப்பு..!!!
இதனிடையே, கடந்த செப்டம்பர் 23-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் தமிழக முதலமைச்சருமான விஜய், மருத்துவமனைக்கு நேரில் சென்று வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அவருக்கு வழங்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவக் குழுவினரிடம் விஜய் விவரங்களை கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
சமூக வலைதளங்களில் பரவிய மருத்துவ சிகிச்சை குறித்த தகவல்கள்
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனை நிர்வாகத்திடம் இருந்து அதிகாரப்பூர்வ உடல்நிலை அறிக்கை வெளியாகாத நிலையில், வி.எஸ்.பாபுவின் உடல்நிலை குறித்து சமூக வலைதளங்களிலும் ஆன்லைன் ஊடகங்களிலும் பல்வேறு தகவல்கள் பரவின. குறிப்பாக, சுவாசப் பிரச்சனைக்காக கழுத்துப் பகுதியில் துளையிட்டு டிரக்கியாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தின.
டிரக்கியாஸ்டி சிகிச்சை குறித்து வெளியான தகவலுக்கு விளக்கம்
இந்த நிலையில், பரவி வரும் தகவல்கள் குறித்து நம்பத்தகுந்த வட்டாரங்கள் விளக்கம் அளித்துள்ளன. வி.எஸ்.பாபுவுக்கு டிரக்கியாஸ்டமி சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அவர் தொடர்ந்து மருத்துவக் குழுவினரின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வந்த தேவையற்ற ஊகங்களுக்கும் வதந்திகளுக்கும் தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களின் கண்காணிப்பில் வி.எஸ்.பாபுவுக்கான சிகிச்சை தொடர்ந்து நடைபெற்று வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க: சற்று முன்... மூச்சுத்திணறலால் வெண்டிலேட்டர் உதவியுடன் VS பாபுவுக்கு சிகிச்சை! மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை....!!!