ப.சிதம்பரத்தை விடாமல் துரத்தும் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு; காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோரிக்கை.!

முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம். அப்போது அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் சட்டத்திற்கு புறம்பாக ஏர்செல் நிறுவனத்தில் 3500 கோடி வெளிநாட்டு நிதியை அனுமதி அளித்தது தொடர்பாக அவர் மீது எழுந்த புகாரின் அடிப்படையில்
ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான டெல்லி, ஊட்டி, கொடைக்கானல் மற்றும் வெளிநாடுகளிலிருந்த சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி கைது நடவடிக்கைகளை மேற்கொண்டது.
இந்நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அவர்களை கைது செய்வதற்கு தடைவிதித்தது. இதனை தொடர்ந்து ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் அமலாக்கத்துறை குறுக்கிட்டு ஜாமீன் வழங்கக் கூடாது என்று வாதிட்டது. மேலும் இந்த வழக்கு சம்பந்தமாக சிதம்பரம் அவர்கள் எந்த ஒத்துழைப்பும் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தது.
இதையடுத்து, வரும் வியாழக்கிழமையன்று நீதிபதி ஓ.பி.சைனி முன்பு ப.சிதம்பரம் ஆஜராகி, தனது தரப்பு வாதங்களை வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.