இணையத்தில் வைரலாகும் நெஞ்சை உருக்கும் வீடியோ; நிலநடுக்க இடுப்பாடுகளில் சகோதரனை காப்பாற்றிய சிறுமி...!

30 மணிநேரம் நிலநடுக்க இடிபாடுகளுக்கு இடையே சிக்கி கொண்ட சிறுமி, சகோதரனை அணைத்தபடி காப்பாற்றிய வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை அதிகாலை துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறக்கத்தில் இருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.
துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் இருக்கும் நூர்டகிக்கு கிழக்கே 23 கிலோமீட்டர் (14.2 மைல்) தொலைவில் 24.1 கிலோமீட்டர் (14.9 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 100 வருடங்களுக்கு பிறகு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கமாகும்.
நிலநடுக்க பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பலி எண்ணிக்கை மேலும் உயரும் என கூறப்படுகிறது.
வடக்கு சிரியாவில் நிலநடுக்க இடிபாடுகளில் சிக்கி கொண்ட சிறுமி, 30 மணிநேரம் தனது சகோதரனை காப்பாற்ற போராடிய வீடியோ தற்போது பரவி வருகிறது. அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கும்போது, நிலநடுக்கத்தில் சிக்கியுள்ளனர்.
இதில், மரியம் (7) என்ற அந்த சிறுமி, இடிபாடுகளுக்கு இடையே சிக்கி படுத்த நிலையில் உள்ளார். சிறுமிக்கு அருகே அவரது சகோதரன் படுத்துள்ளான். இருவரும் நகர முடியாமல் உள்ளனர். எனினும், சகோதரன் மீது எதுவும் விழுந்து விடாமல் இருக்க தலையில் கையை வைத்து போர்த்தியபடி சிறுமி காணப்படுகிறார்.
இரண்டு பேரும் சிமெண்ட் சிலாப்புகளுக்கு கீழே 30 மணிநேரம் வரைசிக்கியிருந்துள்ளனர். மீட்பு குழு இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சையில் சேர்த்துள்ளது. இந்த வீடியோ தற்போது பரவி வருகிறது.