ஆசை வார்த்தை காட்டி மோசம் செய்த இளைஞன் போக்சோவில் கைது...!



Young man arrested in Pokmon

15 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

வடமதுரை அருகே 15 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்த இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியாக இருந்த அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.

வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் 15 வயதான பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி கடந்த வாரம் திடீரென வீட்டில் இருந்து காணாமல் போயுள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின் போது வேடசந்தூர் அருகே உள்ள பூசாரி கவுண்டன் ஊரை சேர்ந்த, வீரமணிகண்டன் என்பவர் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவரை வீட்டிலிருந்து வரவழைத்துள்ளார்.

மேலும் அந்த மாணவியை கடத்திச் சென்று திருமணமும் செய்து உள்ளார். திருமணம் முடிந்த நிலையில் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் மாணவியை வீரமணிகண்டன் மறைத்து மறைத்து வைத்துள்ளார். வீரமணிகண்டனுக்கு, அவருடைய நண்பர்கள் வேல்முருகன் குமாரவேல் ஆகியோர் இச்சம்பவத்திற்காக உதவி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து வீரமணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். மாணவியை மீட்டு அவர்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.