தமிழகம்

உதவிக்கு ஆளின்றி ரோட்டில் மயங்கி விழுந்த டி.எம்.சவுந்தரராஜனின் தம்பி!

Summary:

TMS Brother fall down in road

இசை உலகில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி, பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் டி.எம் சௌந்தரராஜன். இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன்பே 1944-ல் இவரது சகோதரரான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி உடன் இசை கச்சேரிகளில் பங்கேற்றுள்ளார். 

டி.எம்.சௌந்தரராஜனை விட நான்கு வயது இளையவரான டி.எம்கிருஷ்ணமூர்த்தி மிருதங்க வித்துவானாக திகழ்ந்தார். டி.எம்கிருஷ்ணமூர்த்தி அவரின் சகோதரர் டி.எம்.எஸ்.,க்கு இசை ரீதியாக உதவிகள் செய்தவர். இவரது இசை சேவையை பாராட்டி கடந்த 2003-ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது.

தற்பொழுது 94 வயதான டி.எம்.கிருஷ்ணமூர்த்தி , 91 வயதான அவரது மனைவியுடன் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே நரசிங்கம் பகுதியில் வசித்து வருகிறார். கலைமாமணி விருது பெற்றதற்காக தமிழக அரசு சார்பில் மாதந்தோறும் வழங்கப்படும் 2500 ரூபாயை நம்பியே இவர்கள் இருவரும் குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், ஓய்வூதிய புதுப்பிப்பு இந்த மாதத்துடன் நிறைவு பெறுவதால் அதை புதுப்பிப்பதற்காக வீட்டிலிருந்து அரசு பேருந்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்துள்ளார். ஆனால் அவரால் நிற்க முடியாத அளவிற்கு நடந்துவந்தநிலையில், ஆட்சியர் அலுவலக வளாக சாலையில்  மயங்கி விழுந்தார்.

கீழே விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் தூக்கி விசாரித்தபோது ஓய்வூதிய புதுப்பிப்புக்கு வந்ததாக கூறினார். ஓய்வுதியம் புதுப்பிக்கும் பணி அடுத்த மாதம் நடைபெறுவதால் சென்று வருமாறு அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு இருந்த பணியாளர்கள் அவரை ஆட்டோ மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
 


Advertisement