திருடனுக்கு வக்காலத்து?.. அதிமுக ச.ம.உ கைக்கு வந்த ஆபத்து.. கையை வெட்ட ஆட்சியரிடம் பரபரப்பு மனு.!

வீட்டில் திருடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விடாமல் தடுத்து வைத்த திருப்பூர் வடக்கு அதிமுக எம்.எல்.ஏ விஜயகுமாரின் கைகள் வெட்டப்படும் என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணக்கம்பாளையம், நாதம்பாளையம் பகுதியை சார்ந்தவர் நாககுமார் (வயது 50). இவர் கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். இன்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பதாகையுடன் வந்த நாககுமார், திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.என் விஜயகுமார் கைகள் என்னால் வெட்டி எடுக்கப்படும் என்று முழக்கமிட்டார்.
மேலும், அவர் வைத்திருந்த பதாகையிலும் அதிமுக எம்.எல்.ஏ கைகள் வெட்டப்படும் என எழுதப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், அவரை அங்குள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளிக்க வந்த கடிதமும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்டது.
அந்த புகார் கடிதத்தில், "வேலுச்சாமி என்பவரின் வீட்டில் நான் குடியிருந்து வருகிறேன். கடந்த வருடம் ஜூன் மாதம் என் வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளை போனது. இதுகுறித்து பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், வீட்டு உரிமையாளர் வேலுசாமி மீது வழக்குப்பதிவு செய்தனர்.
திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ விஜயகுமார் இவ்விஷயத்தில் தலையிட்டு வேலுசாமியை கைது செய்ய வேண்டாம் என காவல் துறையினரிடம் தெரிவித்தார். இதனால் அதிகாரிகள் வேலுசாமியை கைது செய்யாமல் விட்டனர். வழக்கை திரும்ப பெறக்கூறி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, வீட்டில் திருடப்பட்ட பொருட்கள் ஒப்படைக்கப்படும் என பேசி முடிக்கப்பட்டது.
இதனை நம்பி கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வழக்கை திரும்ப பெற்றுக்கொண்ட நிலையில், என் உடமைகள் தற்போது வரை வழங்கப்படவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் என பல இடங்களில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் எனது வீட்டில் திருடிய நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கவிடாமல் செய்த திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கே.என் விஜயகுமாரின் கைகளை வெட்ட இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அதிகாரிகள் நாககுமாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.