கனியாமூரில் நடந்த கலவரத்துக்கும் வி.சி.கவுக்கும் தொடர்பில்லை; விடுதலை சிறுத்தைகள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்: திருமாவளவன் எம்.பி..!

கனியாமூரில் நடந்த கலவரத்துக்கும் வி.சி.கவுக்கும் தொடர்பில்லை; விடுதலை சிறுத்தைகள் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர்: திருமாவளவன் எம்.பி..!


The VCK has nothing to do with the Kaniyamur riots

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகேயுள்ள கனியாமூர் பகுதியில் இயங்கிவரும் தனியாருக்கு சொந்தமான சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் மரணத்துக்கு நீதி கேட்டும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை விடுவிக்க கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி-துருகம் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார், தனது உரையில் அவர் மேலும், மாணவி ஸ்ரீமதி 3 வது மாடியில் இருந்து கீழே குதித்து இறந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு பெண் சாவில் சந்தேகம் இருந்தால் பிரேத பரிசோதனையின் போது அந்தப் பெண் பலவந்தப்படுத்தபட்டுள்ளாரா? என பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆனால் மாணவி ஸ்ரீமதியின் உடலை அந்த பரிசோதனைக்கு உடபடுத்தப்படவில்லை. எனவே சி.பி.சி.ஐ.டி அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்த மருத்துவரிடம் முதலில் விசாரணை செய்ய வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததை அறிந்த உடனே அந்த கிராமத்துக்கு நேரடியாக சென்று மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தேன். ஆனால் மாணவியின் உயிரிழப்புக்கு பா.ஜனதா கட்சியினர் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை.

மேலும் அந்த பள்ளியின் தாளாளரின் 2 மகன்கள், விடுதியின் பாதுகாவலர், காவலாளி மற்றும் மாணவியை மருத்துவமனைக்கு ஏற்றி சென்ற ஓட்டுனர் ஆகியோரிடம் விசாரணை செய்யப்படவில்லை. மாணவியின் மரணத்தை பற்றி விசாரணை மேற்கொள்ளவில்லை. ஆனார் பள்ளியில் நடந்த கலவரத்தை யார் செய்தார்கள்? எந்த சாதி செய்தது? என அதைப்பற்றி தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த கலவரத்தில் ஈடுபட்டதாக, தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். பள்ளியில் பேருந்துகள் மற்றும் வேறு பொருட்கள் எரிந்தால் காப்பீடு செய்து வாங்கிக் கொள்ளலாம்.அன்றைய தினம் பள்ளியில் நடந்த கலவரத்துக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அவர் கூறினார்.