தலைமை ஆசிரியர் அறைக்குள் புகுந்த 7 பிளஸ்-2 மாணவர்கள்.. சரமாரி தாக்குதல்..  திருப்பூரில் பரபரப்பு!



school-students-attack-teacher-in-thirupur

திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியரை பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர் அறைக்குள் புகுந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளியின் தலைமை ஆசிரியர் கர்னல் (54), நேற்று தனது அறையில் அமர்ந்து, பள்ளிக்கு தொடர்ந்து வராமல் நேரடியாக தேர்வுக்கு மட்டும் வந்த மாணவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அறைக்குள் நுழைந்த பிளஸ்-2 மாணவர்கள் 7 பேர், அவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. தலைமை ஆசிரியரின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த வகுப்பறையில் இருந்த ஆசிரியர் ஒருவர் அங்கு வந்துள்ளார். இதையடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக தெரிகிறது.

மாணவர்கள் தாக்கியதில் காயமடைந்த தலைமை ஆசிரியரை ஆசிரியர்கள் மீட்டு கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. குறிப்பாக முகத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து ரத்தம் வழிந்ததால், அவரது சட்டையிலும் ரத்தக்கறை படிந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக மாலை வரை மருத்துவமனையில் இருந்த அவர், பின்னர் மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வு இன்று தொடக்கம்!

இதற்கிடையே, சக ஆசிரியர் அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த போலீசார், சம்பவம் தொடர்பாக சில பிளஸ்-2 மாணவர்களை தலைமை ஆசிரியர் அறைக்கு அழைத்து வந்து தனித்தனியாக விசாரணை நடத்தினர். மேலும், பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள் கூறுகையில், தலைமை ஆசிரியர் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் மிகவும் தீவிரமானது என்றும், இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், விசாரணையின் அடிப்படையில் தவறு செய்த மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: காதலை ஏற்க மறுத்த குடும்பம்.. திருமணம் கேட்டு வந்த இளைஞருக்கு நேர்ந்த அதிர்ச்சி!