தமிழகம்

ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடம் புரியவில்லை.! முதலமைச்சரிடம் பரிசு பெற்ற 10ம் வகுப்பு மாணவி தற்கொலை.!

Summary:

school student commit suicide

சிவகங்கை மாவட்டத்தில் ஆன்லைனில் நடத்தப்பட்ட பாடம் புரியாததால் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் அனைத்து பள்ளிகளும், கல்லூரிகளும் கடந்த மார்ச் மாதம் முதலே மூடப்பட்டது. தமிழ் நாட்டில் தற்போது வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மகள் சுபிக்ஷா என்ற மாணவி மதுரையில் 10ம் வகுப்பு படித்து வந்தார். 

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், மாணவி சுபிக்ஷா ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்துள்ளார். ஆனால், ஆன்லைன் வழியாக நடத்தப்படும் பாடங்கள் அந்த மாணவிக்கு புரியவில்லை என கூறப்படுகிறது.  இதனால், மனமுடைந்த மாணவி  தனது குடும்பத்தினரிடமும், ஆன்லைன் மூலம் நடத்தப்படும் பாடம் தனக்கு புரியவில்லை என்று கூறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார் மாணவி சுபிக்ஷா. இதனைப்பார்த்த அவரது குடும்பத்தினர் பதறியடித்து கதறி அழுதுள்ளனர்.

உயிரிழந்த மாணவி பேச்சுப்போட்டிக்காக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் கைகளால் பதக்கமும், பாராட்டும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாணவி சுபிக்ஷாவின் தற்கொலை குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement