
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்ன
தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரண்டு நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் வறண்ட வானிலை காரணமாக வெப்பச் சலனம் ஏற்பட்டு வளி மண்டல மேல் அடுக்கில் காற்று சுழற்சி ஏற்பட்டு இடியுடன் கூடிய மழை பெய்துவருகிறது. தற்போது உள் கர்நாடகா முதல் கேரளா வரை 1 கிலோமீட்டர் உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கரூர், சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் சில இடங்களில் லேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement