தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு மழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, பருவகாற்று காரணமாக கடந்த 2 வாரங்களாக பரவலாக நல்ல மழை பெய்தது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, நெல்லை, உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகின்றது.
தென்மேற்கு பருவமழை கடலோர கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இந்த நிலையில் காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (திங்கட்கிழமை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடனும், ஒரு சில பகுதிகளில் லேசான மழையும் பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.