பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை.! பாமகவினர் 3,000 மீது வழக்குப் பதிவு.!

பாமக நடத்திய போராட்டத்தில் வன்முறை.! பாமகவினர் 3,000 மீது வழக்குப் பதிவு.!



PMK Protest issue

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்டமாக சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு நேற்று காலை 11 மணிக்கு போராட்டம் தொடங்கும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதுத் தொடர்பாக சென்னை தாம்பரம், பம்மல் உள்ளிட்ட இடங்களில் பாமகவினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சென்னையில் நேற்று பாமகவினர் நடத்திய போராட்டம் பொதுமக்களை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கியது. அதிகாலை முதல் நண்பகலுக்கு மேல் வரை சென்னையின் முக்கிய சாலைகள் முடக்கப்பட்டன. எந்த பக்கமும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. சாலை வழியாகத்தான் இந்த பிரச்சினை என்றால் ரயில் போக்குவரத்தையும் தடை செய்தனர் பாமகவினர்.

pmk

போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர், ரயில்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டதோடு தண்டவாளத்தில் இரும்புக் கம்பிகளை வைத்து அடைத்தனர் என்ற புகாரும் எழுந்தது. இந்நிலையில், ரயில் மீது கல்வீசி தாக்கியதாக 300 பேர் மீதும், ரயில் பாதையை அடைத்ததாக 50 பேர் மீதும், ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சென்னையில் நடந்த போராட்டம் தொடர்பாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்,  ஜி.கே மணி உள்ளிட்ட 3000 பாமகவினர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.