என் புள்ள அப்பாவி... இன்றோடு இறந்து 9 நாளா மார்ச்சுவரில் இருக்கிறான்! நீதி கேட்டு கதறி அழுத தமிழ்ச்செல்வனின் தாய்..! மதுரையில் வீதியை முற்றுகையிட்டு போராட்டம்..!!!



madurai-school-student-death-protest-cbcid-probe

மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் தமிழ்ச்செல்வன், நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடச் சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரது மரணம் தொடர்பாக போலீசார் சந்தேக மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் மற்றும் ‘தமிழ்ச்செல்வன் நீதிக்கான கூட்டியக்கம்’ சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது.

கொலை வழக்காக மாற்றக் கோரி முற்றுகை

செப்டம்பர் 14ஆம் தேதி மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் உறவினர்களும் அமைப்பினரும் பங்கேற்றனர். தமிழ்ச்செல்வனின் மரணம் தொடர்பான விசாரணையை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்றும், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் எதிராக கோஷங்களை எழுப்பிய அவர்கள், குற்றவாளிகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: அதிர்ச்சி! கிரிக்கெட் விளையாட சென்ற 11-ஆம் வகுப்பு மாணவனின் உடல்.... கண்மாய் முட்புதரில் சடலமாய் மீட்பு! போலீஸ் வலைவீச்சு...!!!

ஆணையர் அலுவலகத்தை நோக்கி செல்ல முயன்ற சிலரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்களை போலீசார் பலவந்தமாக இழுத்துச் சென்று கைது செய்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

ஒன்பது நாட்களாக மார்ச்சுவரியில் உடல்

மகனை இழந்த வேதனையில் அவரது தாயார், “என் மகன் இறந்து இன்றுடன் ஒன்பது நாட்கள் ஆகிறது. அவனது உடல் இன்னும் மார்ச்சுவரியில்தான் உள்ளது. என் மகன் மிகவும் அப்பாவி. அவனை கொலை செய்தவர்கள் யார் என்பதை விரைந்து கண்டுபிடித்து கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மகனின் உடலைக்கூட பெற்றுக்கொள்ள முடியாமல் நீதி கேட்டு குடும்பத்தினர் காத்திருப்பதாக உறவினர்கள் தெரிவித்தனர். இதனால் போராட்டத்தில் பங்கேற்றவர்களிடையே மேலும் பதற்றம் ஏற்பட்டது.

விசாரணையை தீவிரப்படுத்த கோரிக்கை

கிரிக்கெட் விளையாடச் சென்ற பள்ளி மாணவன் முட்புதர் குட்டையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் ஏற்கெனவே அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. தற்போது வழக்கை கொலை வழக்காக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் மற்றும் கைது நடவடிக்கைகள் நடந்துள்ளன.

வழக்கில் தாமதமின்றி நியாயமான விசாரணை நடத்தி, உண்மை காரணத்தை வெளிக்கொண்டு வர வேண்டும் என்பதே குடும்பத்தினரின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. மேலும், CBCID விசாரணை நடத்தி குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

இதையும் படிங்க: சிதம்பரம் அருகே அம்பேத்கர் சிலை சேதம்.. போராட்டம் எதிரொலி.. போலீசார் குவிப்பு!