நைட்டுதான் போன் பண்ணி பேசுனாரு.. காலையில இறந்துட்டார்னு வந்த தகவல்.. ஊருக்கு வந்துவிட்டு சென்ற பாதுகாப்பு படை வீரருக்கு நடந்த துயரம்!

நைட்டுதான் போன் பண்ணி பேசுனாரு.. காலையில இறந்துட்டார்னு வந்த தகவல்.. ஊருக்கு வந்துவிட்டு சென்ற பாதுகாப்பு படை வீரருக்கு நடந்த துயரம்!


Indian Army man dead

மாவோயிஸ்ட் தாக்குதலில் மதுரையை சேர்ந்த பாதுகாப்பு படை வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பொய்கைக்கரைப் பட்டியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இவருக்கு நான்கு மகன்கள் உள்ளநிலையில், 31 வயதாகும் மூன்றாவது மகனான பாலுச்சாமி என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். இந்தோ திபெத்திய எல்லை, பஞ்சாப், அஸ்ஸாம், ஆந்திரா, சட்டீஷ்கர் போன்ற மாநிலங்களிலும் இவர் பணிபுரிந்துள்ளார்.

இந்நிலையில் இவருக்கு கடந்த வருடங்களுக்கு முன்புதான் திருமணம் முடிந்தநிலையில், தற்போது ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. பாதுகாப்பு படையில் அயராது பணியாற்றிவந்த பாலுச்சாமி விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு திரும்பி, கடந்த ஒரு மாதமாக தனது சொந்த ஊரில், தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்துவிட்டு சமீபத்தில்தான் விடுமுறை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.

பணிக்கு திரும்பிய பாலுச்சாமி நேற்றுமுன்தினம் இரவுகூட தனது குடும்பத்தினருக்கு போன் செய்து பேசியுள்ளார். இந்நிலையில் நேற்று காலை  இந்திய - திபெத்திய எல்லைப் பகுதியில் நக்சல்களுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே மோதல் நடைப்பெற்றுள்ளது.

அப்போது இந்திய பாதுகாப்புப்படை வீரர்களின் பாதையில் நக்சல்கள் வைத்த கண்ணிவெடியில், பாலுச்சாமி எதிர்பாராதவிதமாக சிக்கி வீரமரணமடைந்தார். அவருடன் இருந்த மற்ற வீரர்கள் காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இதனை அடுத்து பாலுச்சாமி உயிரிழந்த தகவலை அதிகாரிகள் அவரது குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளனர்.

பாலுச்சாமியின் உடல் பெங்களூரு கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து இன்றிரவு தரைவழியே மதுரை பொய்கைகரைப்பட்டிக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. கடந்த ஒரு மாதமாக சொந்த ஊரில் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு, பணிக்கு திரும்பிய பாலுச்சாமி உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரையும், அவரது கிராமத்தினரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.