தமிழகம்

மேலடுக்கு சுழற்சி காரணமாக 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Summary:

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக, இந்த வாரம் தொடக்கம் முதல் மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. மேலும், இன்று (வியாழக்கிழமை ) தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உள் மாவட்டங்களான நீலகிரி, கோவை ,திருப்பூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், நாமக்கல், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மற்றும் கரூர் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

நாளை (வெள்ளிக்கிழமை ) முதல் 22 ஆம்  தேதி (ஞாயிற்றுக்கிழமை ) வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரையில், இன்று வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Advertisement