இந்திய அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் மாற்றம்? அஜித் அகர்கருக்கு பதிலாக முன்னாள் CSK வீரர் பெயர் பரிசீலனை!



Parthiv Patel choice in Indian team chief selector

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் பதவியில் விரைவில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தற்போதைய தலைமை தேர்வாளராக இருக்கும் அஜித் அகர்கரின் பதவிக்காலம் அக்டோபர் மாத முதல் வாரத்தில் நிறைவடைய உள்ள நிலையில், அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படுமா அல்லது புதிய தலைமை தேர்வாளர் நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Indian cricket team

அஜித் அகர்கர் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய ஆண்கள் மூத்த அணியின் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றார். அவரது தலைமையிலான தேர்வுக்குழு இந்திய அணிக்கான வீரர்கள் தேர்வு உள்ளிட்ட முக்கிய முடிவுகளில் செயல்பட்டு வருகிறது. தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிசிசிஐ நிர்வாகம் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: மகளிர் பிரீமியர் லீக் 5-வது சீசன்.. ஏலம் முதல் போட்டி தொடக்கம் வரை.. பிசிசிஐ அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித் அகர்கருக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்படவில்லை என்றால், அவருக்கு மாற்றாக முன்னாள் இந்திய வீரர் பார்த்திவ் படேலின் பெயர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முன்னாள் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான பார்த்திவ் படேல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் கொண்டவர்.

மேலும், இவர் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொச்சி டஸ்கர்ஸ் கேரளா, டெக்கான் சார்ஜர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் உள்ளிட்ட 6 ஐபிஎல் அணிகளுக்காக விளையாடியுள்ளார்.

Indian cricket team

இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேர்வுக்குழு தொடர்பான முடிவுகளை எடுப்பதற்கான அதிகாரம் வாரிய நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால், அஜித் அகர்கர் தொடர்ந்து தலைமை தேர்வாளராக நீடிப்பாரா அல்லது அவருக்குப் பதிலாக புதிய தலைமை தேர்வாளர் நியமிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐயின் இறுதி முடிவு வரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: CSK-க்கு இந்திய பயிற்சியாளர்? தோனியின் ஆலோசனையால் பரபரக்கும் பயிற்சியாளர் தேர்வு!