தங்கையின் மரணத்திற்கு பழிவாங்கியதாக பரபரப்பு.. கணவனை கொன்றதாக தம்பி வெளியிட்ட செல்ஃபி வீடியோ!
தெலங்கானாவில் இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த அவரது கணவர், சில மாதங்களுக்குப் பிறகு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலைக்கு இளம் பெண்ணின் குடும்பத்தினரே காரணம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவரது தம்பி வெளியிட்டதாக கூறப்படும் செல்ஃபி வீடியோவும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
19 வயதான வைஷ்ணவியும், அதே பகுதியைச் சேர்ந்த சித்தகிரி ஹரிபாபு (26) என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. திருமணமான சில மாதங்களிலேயே, 4 மாத கர்ப்பிணியாக இருந்த வைஷ்ணவி மர்மமான முறையில் உயிரிழந்தார்.
வைஷ்ணவியின் கழுத்தை நெரித்தும், கூர்மையான ஆயுதத்தால் தாக்கியும் கொலை செய்ததாக அவரது கணவர் ஹரிபாபு மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து வைஷ்ணவியின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஹரிபாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வீட்டுக்கு வர மறுத்த மனைவி.. ஆத்திரத்தில் மனைவியின் மூக்கைக் கடித்துக் குதறிய கணவன்!
இந்நிலையில், ஹரிபாபு சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, காரில் வந்த சிலர் அவரை வழிமறித்து கூர்மையான ஆயுதங்களால் தாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஹரிபாபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது. காரில் வந்த மூன்று பேர் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, வைஷ்ணவியின் தம்பி சந்தோஷ் வெளியிட்ட செல்ஃபி வீடியோ ஒன்று தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில், தனது தங்கையின் மரணத்துக்கு காரணமான ஹரிபாபுவை தான்தான் கொன்றதாக அவர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், சம்பவத்துக்கு தானே பொறுப்பு என்றும், காவல் நிலையத்தில் சரணடையப் போவதாகவும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவின் உண்மைத் தன்மை, ஹரிபாபு கொலைக்குப் பின்னால் சந்தோஷ் மட்டும்தான் உள்ளாரா அல்லது வேறு நபர்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் பிற ஆதாரங்களின் அடிப்படையில் சம்பவத்தின் முழு பின்னணியையும் போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மனைவியை கொன்று தலையை பிரிட்ஜில் வைத்த கணவர்! கவுகாத்தியில் அதிர்ச்சி சம்பவம்!