ஒரு எம்.பி. சீட்டுக்காகத்தான் வந்தார்கள்.. தேமுதிக குறித்து வன்னி அரசு பரபரப்பு பேட்டி!



Vanniyarasu condemned against dmdk

சென்னை வேப்பேரியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்த கருத்துகளுக்கு பதிலளித்தார்.

இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்துவது முன்கூட்டியே தெரிந்திருந்தால் தாங்கள் வேட்பாளர்களை நிறுத்தியிருக்க மாட்டோம் என சீமான் கூறியிருந்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த வன்னி அரசு, சீமான் கூறிய பல கருத்துகளில் இதுவும் ஒன்றாக இருப்பதாக விமர்சித்தார். மாணவர் தமிழ்ச்செல்வன் மரணம் தொடர்பான உண்மை காரணம் வெளிவர வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளபடி சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடும் என்றும் தெரிவித்தார்.

தேமுதிக குறித்து பேசிய வன்னி அரசு, அக்கட்சி கடந்த காலங்களில் பாஜகவுடன் இணைந்து செயல்பட்டதாகவும், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கூட்டணி தொடர்பாக இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறினார். மேலும், மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அடிப்படையாகக் கொண்டுதான் திமுக கூட்டணிக்கு தேமுதிக வந்ததாக தாம் கருதுவதாகவும் தெரிவித்தார். இந்த பின்னணியில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைச்சர் பதவிக்காக கூட்டணி மாறியதாகக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: இதுவும் ஒரு மிகப்பெரிய பொய்! சீமானை கடுமையாக விமர்சித்த வன்னி அரசு!

திமுக கூட்டணியில் தாங்கள் நீண்ட காலமாக பயணித்து வந்த நிலையில், புதிதாக தேமுதிக கூட்டணிக்குள் கொண்டுவரப்பட்டதும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளைவிட தேமுதிகவுக்கு அதிக தொகுதிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டதுமே திமுகவுடனான முரண்பாடுகளில் முக்கிய காரணியாக இருந்ததாக வன்னி அரசு தெரிவித்தார்.

மேலும், திருமாவளவன் தெரிவித்த கருத்து தேமுதிகவை குற்றம்சாட்டும் நோக்கில் கூறப்படவில்லை என்றும், கூட்டணியில் தொகுதி பங்கீடு மற்றும் கட்சிகளுக்கு வழங்கப்பட்ட முக்கியத்துவம் தொடர்பான அதிருப்தியை வெளிப்படுத்தியதே அதன் நோக்கம் என்றும் வன்னி அரசு விளக்கமளித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பதவிக்காக அரசியல் முடிவுகளை எடுக்கும் கட்சி அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சீமானை மக்கள் ஏற்கவில்லை!. அமைச்சர் வன்னி அரசு சரமாரி விமர்சனம்!