லைப் ஸ்டைல் சமூகம்

வரதட்சனை கேட்டு திருமணத்தை நிறுத்திய மணமகனுக்கு மொட்டை அடித்த மர்ம நபர்கள்!

Summary:

man stopped marriage for dowry

லக்னோவில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபருக்கு மர்ம நபர்கள் மணமகனின் பாதி தலைக்கு மொட்டை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவில் குர்ரம்நகர் பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதாக இருந்தது. திருமண நாள் நெருங்க நெருங்க மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரிடம் தொடர்ந்து வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர்.

புதிய பைக் மற்றும் மணமகளுக்கு நெக்லஸ் உள்ளிட்ட சில பொருட்களை வரதட்சணையாக வழங்கவேண்டுமென மணமகள் வீட்டாரிடம் கேட்டுள்ளனர். ஆனால் கடைசி நேரத்தில் மணமகள் வீட்டார் அதை ஏற்பாடு செய்து கொடுக்க முடியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்தி விட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த மணமகள் வீட்டாரை சேர்ந்த சில மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த மணமகனை கடத்தி ஒரு பூங்காவிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு மணமகனின் பாதி தலையை மொட்டையடித்து உள்ளனர். இதனை கண்ட அருகில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் மர்ம நபர்களை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து மணப்பெண்ணின் பாட்டி கூறும்போது, ''திருமணம் நடப்பதற்கு 5 நாட்களுக்கு முன், மணமகன் வரதட்சணை கேட்டார். குறுகிய காலமே இருந்ததால், எங்களால் செய்ய இயலாது என்று கூறினோம். அதனால் திருமணத்தை மணமகன் வீட்டார் நிறுத்தினர். அவரின் தலைக்கு யார் மொட்டை அடித்தது என்று தெரியவில்லை''  என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து மணமகனின் பாதி தலையை மொட்டை அடித்த சம்பவத்தை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.


Advertisement