அறை முழுக்க பலூன், மெழுகுவர்த்தியால் அலங்கரிப்பு! பிரிட்ஜில் வெள்ளை ஆடையுடன் 5 வயது மகளின் பிணம்... பிடித்த சாக்லேட்டுகளுடன் தந்தை எழுதி இருந்த வசனம்! வெளியான பகீர் பின்னணி...!!!
குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் 5 வயது மகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப் பணியில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த 40 வயது கிஷோர் தனக், தனது மகள் ஹிமான்ஷியின் உயிரை பறித்துவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பலூன்கள், மெழுகுவர்த்திகளால் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் தந்தையும் மகளும் சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், கடன் சுமை காரணமாக இந்த துயர முடிவு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்பு கிடைக்காததால் வீட்டுக்கு சென்ற சகோதரர்
சம்பவ நேரத்தில் கிஷோரின் மனைவி மஞ்சுபென் தனது தந்தை வீட்டில் இருந்துள்ளார். கணவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியாததால் சந்தேகமடைந்த அவர், தனது சகோதரரை வீட்டுக்குச் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அவர் அங்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோதுதான் தந்தையும் மகளும் உயிரிழந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த போலீசார், உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணையை தொடங்கினர்.
ரூ.7.25 லட்சம் பணம் கிடைக்காததால் நெருக்கடி?
விசாரணையில் கிஷோர் தனிப்பட்ட முறையில் பெற்ற கடனை தனது கட்டுமானத் தொழிலில் முதலீடு செய்திருந்தது தெரியவந்துள்ளது. வியாபார நண்பர்களிடம் இருந்து வர வேண்டிய ரூ.7.25 லட்சம் பணம் கிடைக்காமல் போனதால் அவர் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருந்ததாக போலீசார் கூறுகின்றனர்.
படுக்கையில் மூன்று தற்கொலைக் கடிதங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அதில், தான் இறந்த பிறகு தனது மகள் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அவளையும் கொன்றதாக கிஷோர் குறிப்பிட்டிருந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடிதங்களின் முழு விவரங்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பிறந்தநாள் கொண்டாட்டம் போல அலங்கரிக்கப்பட்ட அறை
அறையின் அலங்காரம் போலீசாரின் கவனத்தை ஈர்த்துள்ளது. பலூன்கள் மற்றும் மெழுகுவர்த்திகளால் அறை அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஹிமான்ஷிக்கு வெள்ளை ஆடைகளை அணிவித்து, தலையில் துப்பட்டாவும் வைக்கப்பட்டிருந்தது. அவரது உதடுகளில் துளசி இலைகளும் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
மேலும், சிறுமியின் உடல் குஷன்களுடன் ப்ரிட்ஜிற்குள் வைத்து மூடப்பட்டிருந்தது. ஹிமான்ஷிக்கு பிடித்த சாக்லேட்டுகள் அறையிலும் ப்ரிட்ஜிற்குள்ளும் வைக்கப்பட்டிருந்தன. சிறுமியின் பிறந்தநாள் இல்லாத நிலையிலும், ப்ரிட்ஜின் மீது 'Happy Birthday Himanshi' என எழுதப்பட்ட காகிதம் ஒன்று இருந்தது. இதனால், மகளின் இறுதிச்சடங்கை பிறந்தநாள் கொண்டாட்டம் போன்ற முறையில் அமைக்க தந்தை திட்டமிட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வீட்டுக்குள் பிறந்தநாள் கொண்டாட்டத்தை நினைவூட்டும் அலங்காரம் இருந்த நிலையில், அதே அறையில் தந்தையும் மகளும் உயிரிழந்து கிடந்தது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடன் பிரச்சினை, தற்கொலைக் கடிதங்கள் மற்றும் அறையில் காணப்பட்ட பொருட்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தங்கையின் மரணத்திற்கு பழிவாங்கியதாக பரபரப்பு.. கணவனை கொன்றதாக தம்பி வெளியிட்ட செல்ஃபி வீடியோ!