இருவருக்கும் இடையிலான உறவில் கர்ப்பம்..! என் குழந்தைகள் அவரை அப்பான்னனு தான் கூப்பிட்டாங்க....! கருப்பு முருகானந்தம் மீது பெண் நிர்வாகி அளித்த புகார்! டெல்லி மேலிடம் எடுத்த அதிரடி முடிவு...!!!
தமிழ்நாடு பாஜக மாநில பொதுச்செயலாளராக இருந்த கருப்பு முருகானந்தம் மீது அக்கட்சியின் பெண் நிர்வாகி ஒருவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், உடல் மற்றும் மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக பாஜக தேசிய மற்றும் மாநிலத் தலைமையிடம் அவர் மனு அளித்த நிலையில், கருப்பு முருகானந்தம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
திருச்சியைச் சேர்ந்த திவ்யா சேஷாத்ரி, தமிழக பாஜக பிற்படுத்தப்பட்டோர் பிரிவு செயலாளராக உள்ளார். செப்டம்பர் 12-ம் தேதி கட்சியின் தேசிய தலைவர் நிதின் நபின், தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், மாநில பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோருக்கு அவர் புகார் அனுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருமண வாக்குறுதி, துன்புறுத்தல் என புகார்
தனது இரண்டு குழந்தைகளையும் தனியாக கவனித்துக்கொண்டு அரசியல் பணியாற்றி வந்ததாக அந்தப் பெண் தெரிவித்துள்ளார். கருப்பு முருகானந்தம் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதை நம்பி, கர்நாடகாவில் பாஜகவில் வகித்து வந்த மாநில அளவிலான பொறுப்பை விட்டு 2024-ல் திருச்சிக்கு குடிபெயர்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாகவும், இருவருக்கும் இடையிலான உறவில் தான் கர்ப்பமான நிலையில், தனது விருப்பத்துக்கு மாறாக கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார். மருத்துவ ஆவணங்கள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
ஸ்ரீரங்கம் தொகுதி வாய்ப்பும், மிரட்டல் குற்றச்சாட்டும்
2026 சட்டசபைத் தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றுத் தருவதாக கருப்பு முருகானந்தம் உறுதியளித்ததாகவும், பின்னர் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், தனது குழந்தைகளின் பள்ளி ஆவணங்களில் கருப்பு முருகானந்தத்தின் பெயர் பாதுகாவலராக இடம்பெற்றுள்ளதாகவும் புகாரில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கேட்டபோது, தன்னையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும், பெங்களூரில் உள்ள தனது வீட்டை ஆக்கிரமித்து தன்னை வெளியேற்ற முயற்சி செய்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன் புகாருக்கு ஆதரவாக மின்னணு ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளின் விவரங்களை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம்
புகார் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார். கருப்பு முருகானந்தம் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, தன் மீதான குற்றச்சாட்டுகளை கருப்பு முருகானந்தம் மறுத்துள்ளார். முறையான விசாரணை நடத்தாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தன்னை தொடர்புபடுத்தி செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் போலியான புகார் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். புகார் குறித்த முழு விவரங்களை அறிந்த பிறகு விளக்கம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கொளத்தூர் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு எப்படி உள்ளார்? மருத்துவமனை வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!