தமிழகம் சினிமா

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸ்.! பிரபாகரனாக விஜய் சேதுபதி நடிக்கிறாரா?

Summary:

பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகர் விஜய்சேதுபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக இருந்தது. இதற்கு தமிழ் பிரபலங்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து அப்படத்தில் இருந்து நடிகர் விஜய்சேதுபதி விலகியுள்ளார்.

இந்நிலையில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு தொடர்பான வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வீரப்பன், ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான படங்களை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு வெப் சீரிஸை எடுக்க திட்டமிட்டு இருப்பதாகவும், பிரபாகரன் கதாபாத்திரத்துக்கு விஜய் சேதுபதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் கவிஞர் தாமரை விஜய் சேதுபதிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் மக்கள் செல்வன் விஜயசேதுபதி அவர்களே, நல்ல முடிவாக எடுங்கள். என்ன ஆகிவிடும் என்று பார்க்கலாம். உலகத்தமிழர் நம்பக்கம் இருக்கிறார்கள். தேசியத் தலைவர் மாவீரன் பிரபாகரன் வாழ்க்கை படமாகும் நாள் தொலைவிலில்லை என எழுதியிருந்தார். ஆனால் பிரபாகரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பாரா? இல்லையா? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


Advertisement