வேற லெவல்மா...! புடவை அணிந்து வெறும் காலில் 1600 மீட்டர் ஓட்டத்தை வெறும் 6 நிமிடங்களில் ஓடி முடித்த கவிதா! வெற்றியை அடைய வெறியோடு ஓடிய பெண்ணின் வீடியோ...!!!



jharkhand-widow-kavita-kumari-home-guard-run-2rmlqz

வறுமை, வசதியின்மை எதுவும் தனது லட்சியத்துக்கு தடையாக இருக்காது என்பதை ஜார்க்கண்டைச் சேர்ந்த கவிதா குமாரி நிரூபித்துள்ளார். ராம்கர் மாவட்டத்தில் நடைபெற்ற ஹோம் கார்ட் உடற்தகுதித் தேர்வில், புடவை அணிந்து வெறும் காலில் 1,600 மீட்டர் ஓட்டத்தை அவர் நிறைவு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 10 நிமிடங்களுக்குள் ஓட வேண்டிய தூரத்தை வெறும் 6 நிமிடங்களில் கடந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

புடவை, வெறும் கால்கள்... 6 நிமிடங்களில் இலக்கை எட்டிய கவிதா

துல்மி தாலுகாவைச் சேர்ந்த சோசோ கிராமத்தில் வசிக்கும் கவிதா குமாரி, கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்வில் பங்கேற்றார். ஓட்டப் பயிற்சிக்கான பிரத்யேக ஆடை இல்லை. காலில் அணிய ஷூ கூட இல்லை. இருந்தபோதிலும் பாரம்பரிய புடவை அணிந்தபடியே, வெறும் கால்களுடன் 1,600 மீட்டர் தூரத்தை ஓடி முடித்தார். அவரது ஓட்டத்தை பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வீட்டிற்குள் நுழைந்த மைத்துனர்.! அடுத்த நொடியே கணவனை இழந்த மனைவிக்கு நடந்த அதிர்ச்சி! பகீர் சம்பவம்..!!!

குடும்பத்தின் எதிர்காலத்துக்காக அதிகாலை பயிற்சி

கணவனை இழந்த கவிதா, தனது இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான மாமியார், மாமனாரை கவனித்து வருகிறார். குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் சிரமமாக இருந்தாலும், ஹோம் கார்ட் பணியில் சேர வேண்டும் என்ற கனவை அவர் கைவிடவில்லை. தினமும் அதிகாலை 4 மணிக்கே எழுந்து புடவையிலேயே ஓட்டப் பயிற்சி மேற்கொண்டுள்ளார். “எனது குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றவே இந்த வேலையில் சேர விரும்புகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான இடஒதுக்கீடு;

ராம்கர் மாவட்டத்தில் காலியாக உள்ள 284 ஹோம் கார்ட் பணியிடங்களில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 5 சதவீதம் கைம்பெண்கள் மற்றும் விவாகரத்தான பெண்களுக்காக பிரத்யேகமாக வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள போராடி வரும் கவிதாவின் விடாமுயற்சியை பாராட்டும் வகையில், உள்ளூர் ஓட்டப்பயிற்சி அகாடமி உறுப்பினர்கள் அவரது வீட்டிற்கே சென்று கௌரவித்தனர்.

வசதிகள் இல்லாத நிலையிலும் தொடர்ந்து பயிற்சி செய்து, உடற்தகுதித் தேர்வில் சிறப்பாக செயல்பட்ட கவிதா குமாரியின் தன்னம்பிக்கை தற்போது பலரது கவனத்தையும் பெற்றுள்ளது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன் தனது கனவையும் நோக்கி ஓடும் அவரது பயணம், தடைகளை கடந்து முன்னேற நினைக்கும் பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் உதாரணமாக மாறியுள்ளது.

 

இதையும் படிங்க: என்னம்மா ஆச்சு உனக்கு? அதி வேகமாக செல்லும் வாகனங்களுக்கு நடுவே... நடுரோட்டில் படுத்து கதறி அழுத இளம்பெண்..! சக வாகன ஓட்டிகள் செய்த அந்த ஒரு காரியம்.. வைரல் வீடியோ..!!!