மருத்துமனையில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்த 100 ஆண்டு சிறைக்கைதி! வெளியில் போய் வேடம் மாற்றம்... இறுதியில் "கருப்பு" திரைப்படத்தில் போலீஸ் காட்டிய 'ரியல் கிளைமாக்ஸ்' காட்சி!!!
சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய ஆயுள் தண்டனை கைதி, 13 நாட்கள் போலீசாரை ஏமாற்றி வந்த நிலையில், விருதுநகரில் தியேட்டரில் படம் பார்த்துக்கொண்டிருந்தபோது சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா காட்சியை நினைவுபடுத்தும் வகையில் நடந்த இந்த கைது நடவடிக்கை தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது.
பல குற்ற வழக்குகளில் தண்டனை அனுபவித்து வந்த முகமது உசேன், போலீசாரின் கண்காணிப்பை மீறி தப்பியதையடுத்து மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து தப்பிய கைதி
திருச்சி பலாத்கார வழக்கு, கொள்ளை மற்றும் திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் 100 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்த முகமது உசேன், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த மே 9-ஆம் தேதி வயிற்று வலி காரணமாக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், பாதுகாப்பில் இருந்த போலீசாரை ஏமாற்றி தப்பியுள்ளார்.
தகவலின்படி, மருத்துவமனையின் கழிவறை ஜன்னல் கம்பிகளை வளைத்து வெளியேறிய அவர், அங்கிருந்து தலைமறைவாகி விட்டார். இதையடுத்து சேலம் மாநகர காவல் ஆணையர் ஏ.கே. கிரி உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
வேடம் மாற்றி போலீசாரை ஏமாற்றிய திட்டம்
போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க அம்மாபேட்டை பகுதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து, 7 பவுன் நகை, ரொக்கம் மற்றும் இருசக்கர வாகனத்தைத் திருடியதாகவும் கூறப்படுகிறது. மேலும், தனது அடையாளத்தை மறைக்க தாடி மற்றும் மீசையை முற்றிலும் சவரம் செய்து வேடம் மாற்றியிருந்தார்.
இதனால், 13 நாட்களாக போலீசாருக்கு சவாலாக இருந்து வந்த அவர், பல இடங்களில் பதுங்கியபடி சுற்றித்திரிந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தியேட்டரில் நடந்த அதிரடி கைது
இந்நிலையில், விருதுநகர் பகுதியில் முகமது உசேன் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள பிரபல தியேட்டரில் அவர் ‘கருப்பு’ திரைப்படத்தைப் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டுபிடித்தனர்.
திரையரங்கில் இருட்டாக இருந்ததால் உடனடியாக நடவடிக்கை எடுக்காமல், படம் இடைவேளைக்கு வரும் வரை போலீசார் காத்திருந்தனர். பின்னர் விளக்குகள் எரிந்ததும் இருக்கையில் அமர்ந்திருந்த முகமது உசேனை சுற்றிவளைத்து கைது செய்தனர்.
தியேட்டரிலேயே நடந்த இந்த கைது நடவடிக்கை அங்கிருந்த பார்வையாளர்களை ஆச்சரியப்பட வைத்தது. மீண்டும் கைது செய்யப்பட்ட முகமது உசேன் பலத்த பாதுகாப்புடன் சேலம் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். மேலும், அவர் தொடர்பான திருட்டு சம்பவங்கள் குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு வருஷமா நடந்த கொடுமை.... 19 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்! இறுதியில் பெண்ணுக்கு நடந்த பேரதிர்ச்சி....பகீர் சம்பவம்!!!