வெளிநாட்டில் இருந்து வந்த 17 பேரை தேடுகிறது வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை.!



Vellore 17 Foreign Returns Missing

வேலூர் மாவட்டத்தில் ஓமிக்ரான் கொரோனா பரவுதலை கண்காணிக்க தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணித்து கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும், கட்டாயம் அவர்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

வேலூர் மாவட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்தவர்களின் விபரத்தை மத்திய அரசு அளித்துள்ள நிலையில், கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளிநாட்டில் இருந்து 71 பேர் வேலூருக்கு வருகை தந்துள்ளனர். இவர்களில் 42 பேர் அடையாளம் காணப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். 

இவர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டுள்ள நிலையில், 12 பேர் பிற மாவட்டத்தை சார்ந்தவர்கள். மீதம் இருக்கும் 17 பேர் யார்? எங்கு இருக்கிறார்கள்? என்ற விசாரணை சுகாதாரத்துறையால் நடத்தப்பட்டு வருகிறது. 

vellore

வேலூர் மாநகராட்சி பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கியிருப்பவர்கள் யார்? எந்த ஊரை சார்ந்தவர்கள் என ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. தனியார் மருத்துவமனைக்கு வரும் நபர்கள் சிலர் போலியான முகவரியையும் கொடுத்து இருப்பதாக தெரியவருகிறது. அவர்களின் ஆதார் தொடர்பான விபரம் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதா? எனவும் சோதனை நடந்து வருகிறது. 

ஓமிக்ரான் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் 50 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் வீடுகளில் 7 நாட்கள் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், பெங்களுரில் இருந்து வருபவர்கள் விடுதிக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், அதிகளவில் கூட்டத்தை சேர்க்க கூடாது எனவும் விடுதி உரிமையாளர்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமணையில் வெளிமாநிலத்தவர்களின் ஆதார் எண் விபரத்தை சேகரித்து வைக்கவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.