ரஜினியின் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறதா? அல்லது கூட்டணி அமைக்கிறதா?



thinesh-kundu-rao-talk-about-rajin

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த் கடந்த வாரம் திங்கள் கிழமை அன்று மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து தன்னுடைய அரசியல் பயணம் குறித்து ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தனது அரசியல் நிலைப்பாட்டை குறித்து மிக விரைவில் அறிவிப்பதாக அறிவித்திருந்தார். 

இந்தநிலையில் டிசம்பர் 3 ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், "ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு. மாத்துவோம் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போ இல்லேன்னா எப்பவும் இல்ல" என்று அவரது பதிவில் ஹேஸ்டேக் போட்டு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வரப்போகிற சட்டமன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம், அதிசயம், நிகழும் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு தமிழக அரசியலில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவருடன் பா.ஜ.க-வை சேர்ந்த பலர் தொடர்பில் உள்ளனர். ஆனால் ரஜினிகாந்த் இன்னும் அரசியல் கட்சியை பதிவு செய்யவில்லை. அவரது கட்சியின் கொள்கை, திட்டங்கள் என்ன என்பது தெரியவில்லை. 

rajini

அவரது கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுகிறதா? இல்லை கூட்டணி அமைக்கிறதா? என்ற விஷயத்தில் தெளிவு இல்லை. இந்த விஷயங்களில் தெளிவு இருந்தால் மட்டுமே, அவரது கட்சி தமிழக அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்பதை மதிப்பிட முடியும் என தெரிவித்துள்ளார்.