வீரத்தம்பதிக்கு அடித்த அதிர்ஷ்டம்! அவர்களை கெளரவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!

நாடு முழுவதும் 73வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். இந்த விழாவில் அமைச்சர்கள் கலந்துகொண்டு தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருது வழங்கி கவுரவித்தார். திருநெல்வேலி மாவட்டம் கடையத்தில் கொள்ளையனை துணிச்சலுடன் எதிர்கொண்டு விரட்டி அடித்த சண்முகவேலு, செந்தாமரை தம்பதிக்கு அதீத துணிவுக்கான முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருதுடன் 2 லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கப்பட்டது.
இரண்டு தினங்களுக்கு முன்பு பலரும் வயதான தம்பதியர் கொள்ளையர்களை விரட்டியடித்த சிசிடிவி பதிவை கண்டு வியப்படைந்தனர் மேலும் பலர் பாராட்டுகளை தெரிவித்தனர். ஏற்கனவே திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தம்பதியரின் வீட்டிற்கு நேரடியாக சென்று பாராட்டு தெரிவித்தார்.
இந்தநிலையில், அந்த தம்பதியினருக்கு அதீத துணிவுக்கான சிறப்பு விருது முதலமைச்சரால் வழங்கப்பட்டதையடுத்து தமிழக மக்கள் பாராட்டி வருகின்றனர்.