ஏர்டெல் பேன்சி நம்பர், தொழில் முதலீடு பெயரில் பலே மோசடி.. மக்களே உஷார்.. கேடி கும்பல் அட்டகாசம்.!

ஏர்டெல் பேன்சி நம்பர், தொழில் முதலீடு பெயரில் பலே மோசடி.. மக்களே உஷார்.. கேடி கும்பல் அட்டகாசம்.!


Salem Man cheated by Frauds Airtel Fancy Number and England TN Business Investment

வெளிநாட்டில் இருந்து தமிழகத்தில் தொழில் தொடங்க இருக்கிறேன், உங்களுக்கு பேன்சி நம்பர் வேணுமா? என்று வரும் அழைப்புகளில் மக்களை ஏமாற்றும் மோசடி கும்பல் கைவரிசை காண்பித்து வருவது அம்பலமாகியுள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த இருவர் இதனால் பணத்தை இழந்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள இரும்பாலை, விவேகானந்தர் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ் (வயது 54). கடந்த சில மாதத்திற்கு முன்னதாக சுரேஷுக்கு முகநூல் வாயிலாக, இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவருடன் நட்பு கிடைத்துள்ளது. இவர் இந்தியாவில் பார்மசிஸ்ட் தொழில் செய்ய விருப்பம் இருப்பதாகவும், அதனை உனது பெயரிலேயே தொடங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும், இதனால் வரும் இலாபத்தில் 50 % பங்கு என்று ஆசைவார்த்தை கூறவே, அவரின் வலையில் சுரேஷ் விழுந்துள்ளார். இதனையடுத்து, சில நாட்கள் கழித்து தொடர்பு கொண்ட இங்கிலாந்து நபர், நான் தொழில் தொடங்க இந்தியா வந்துள்ளேன். டெல்லி விமான நிலையத்தில் இருக்கிறேன். கையில் பணம் எடுத்து வந்துள்ளதாக சுங்க துறையினர் பிடித்துள்ளார்கள். 

அவர்களுக்கு ரூ.1 இலட்சத்து 61 ஆயிரம் வரி செலுத்த வேண்டும். அதனை சேலம் வந்ததும் மொத்தமாக தருகிறேன் என்று கூறவே, இதனை உண்மை என நம்பிய சுரேஷும் பணத்தை அனுப்பி வைத்துள்ளார். இதன்பின்னர், இங்கிலாந்து நாட்டவரின் செல்போன் நம்பர் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சுரேஷ், சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Salem

இதனைப்போல, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ராயல் கார்டன் பகுதியில் வசித்து வரும் கனகராஜுக்கு (வயது 41) தொடர்புகொண்ட மர்ம நபர், ஏர்டெல் நிறுவனத்தின் பேன்சி நம்பர் வேண்டுமா? என்று பேசி, அதனை பெற ரூ.59 ஆயிரம் கட்டணம் செலுத்தினால் உடனடியாக பேன்சி நம்பர் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனை நம்பிய கனகராஜும் ரூ.59 ஆயிரம் செலுத்த, மீண்டும் மரம் நபருக்கு தொடர்பு கொள்கையில் போன் ஸ்விச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கனகராஜ் சேலம் மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஏற்கனவே இதுதொடர்பான சம்பவங்களில் ஈடுபட்ட நைஜீரிய நாட்டினை சேர்ந்தவர்கள் உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.