
ஸ்கெட்ச் போட்டு 31 இருசக்கர வாகனங்களை திருடிய நபர்.! தட்டி தூக்கிய புதுக்கோட்டை போலீஸ்.!
புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகனங்கள் திருடு போவதாக போலீசாருக்கு அதிகப்படியாக புகார் வந்தது. இதனையடுத்து புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது அவர் முன்னுக்குபின் முரணாக பதிலளித்துள்ளார். இதனையடுத்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் கிழக்கு பகுதியை சேர்ந்த கண்ணன் என்பது தெரியவந்தது.
கண்ணன் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல பகுதியில் இருச்சக்கரவாகனங்கள் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து அவர் திருடி மறைத்துவைத்திருந்த 31 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Advertisement
Advertisement