தமிழகம்

மணல் கடத்தல் வழக்கில் இனி முன்ஜாமீன் கிடையாது!. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திட்டவட்டம்!

Summary:

not allow to prebail in sand smuggling

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் ஏராளமான மணல் கடத்தல் வழக்குகள் தினமும் பதிவாகின்றன. இந்த வழக்குகளில் சிக்குபவர்களுக்கு முன்ஜாமீன், ஜாமீன் வழங்கும்போது, குறிப்பிட்ட தொகையை மாவட்ட நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும் என்ற நிபந்தனைகளை நீதிமன்றங்கள் பிறப்பித்து வந்தன. ஆனால் பலரும் இந்த தொகையை பொருட்படுத்தாமல் தொடர்ந்து மணல் கடத்தல் செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.
 
மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குபவர்களுக்கு முன்ஜாமீன், ஜாமீன் வழங்கும்போது, குறிப்பிட்ட தொகையை மாவட்ட நிர்வாகத்துக்கு செலுத்த செய்தால் மணல் கடத்தல் குறையும் என்ற எண்ணத்தில் நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பித்தன. ஆனால் மணல் கடத்தல் குறைந்தபாடில்லை. மேலும் , ஜாமீன், முன்ஜாமீன் நிபந்தனை மூலம் மாவட்ட நிர்வாகத்துக்கு கிடைக்கும் தொகையும் பெரும் தொகையாக அதிகரித்தது.

இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்கள் முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த பல மனுக்கள் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மணல் கடத்தல் வழக்குகளில் சிக்கியவர்களுக்கு எளிதாக முன்ஜாமீன் கிடைக்கிறது. அதனால் மணல் கடத்தல் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. மேலும், சிறைக்குள் போகாமல் முன்ஜாமீன் கிடைப்பதால் பலர் தைரியமாக கடத்தலில் ஈடுபடுகின்றனர். 

எனவே இனி மணல் கடத்தல் வழக்குகளில் சிக்குவோருக்கு முன்ஜாமீன் கிடையாது. அவர்கள் சிறைத்தண்டனை அனுபவித்தால் தான் கடத்தலில் ஈடுபடுவோருக்கு பயம் வரும். கடத்தல் குறையும். இயற்கை பாதுகாக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து விரிவான தீர்ப்பு விரைவில் வழங்கப்படும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.


Advertisement