கடலூரில் 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.! பிரதமர் மோடி ட்வீட்



modi talk about cuddalore death

கடலூர் அருகே நெல்லிக்குப்பம் பகுதியில் கெடிலம் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தற்போது கோடை மழை பெய்ததால் இந்த தடுப்பணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. இந்தநிலையில், அந்த தடுப்பணையில் அந்த பகுதியை சேர்ந்த சிறுவர்கள், சிறுமிகள் குளிப்பது வழக்கம்.

அதன்படி நேற்று காலை அதே பகுதியை சேர்ந்த சிறுமிகள் சுமுதா, பிரியா,மோனிகா, சங்கீதா, பிரியதர்ஷினி கவிதா மற்றும் இளம்பெண் நவநீதா ஆகியோர் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும் போது தடுப்பணைக்கு அருகே  ஏற்பட்ட சுழல் காரணமாக  இரண்டு பேர் நீரில் மூழ்கினர். இதை பார்த்த மற்ற ஐந்து பேரும்  அவர்களைக் காப்பாற்ற சென்றனர், அப்போது அவர்களும்  நீரில் மூழ்கியுள்ளனர்.

நீரில் மூழ்கியவர்களை பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்ட நிலையில் 7 பேரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  

இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "தமிழகத்தின் கடலூரில் சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தது வருத்தமளிக்கிறது. இந்த துயரமான நேரத்தில், என் எண்ணங்கள் இறந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன" என்று கூறியுள்ளார்.