டபுள் சர்ப்ரைஸ்.... மகளிருக்கு ரூ.2,500... இளைஞர்களுக்கு ரூ.4,000! பட்ஜெட்டில் மாஸ் காட்டப்போகும் CM விஜய்..!!!
தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டமன்றத்தில் வெளியாக உள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற முக்கிய நலத்திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
அரசு பொறுப்பேற்ற பிறகு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் சிங்கப்பெண் அதிரடிப் படை உள்ளிட்ட திட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மீதமுள்ள முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் முதல் பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பது கவனிக்கப்படுகிறது.
நிதித்துறையின் கணக்கீடு
மகளிர் உரிமைத்தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்துவது தொடர்பாக முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தை செயல்படுத்தினால் மாதந்தோறும் சுமார் ரூ.30,000 கோடி வரை கூடுதல் நிதி தேவைப்படும் என நிதித்துறை கணக்கிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.4,000 வழங்கும் வேலையில்லா இளைஞர் உதவித்தொகை திட்டத்திற்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்பதால், அதன் நிதி தாக்கம் குறித்து விரிவான அறிக்கை முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஈஸ்வரன் வலியுறுத்திய கோரிக்கை
இதற்கிடையில், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈஸ்வரன், வேலையில்லா இளைஞர்களுக்கான மாதம் ரூ.4,000 உதவித்தொகை திட்டத்தை வரவிருக்கும் பட்ஜெட்டிலேயே அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், வேலை தேடும் காலத்தில் ஏற்படும் பொருளாதார சுமையை குறைக்கவும், இளைஞர்கள் தவறான பாதையில் செல்லாமல் இருக்கவும் இந்தத் திட்டத்தை தாமதப்படுத்தக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நிதிச் சவால்கள் நிலவினாலும், மகளிர் உரிமைத்தொகை உயர்வு மற்றும் வேலையில்லா இளைஞர்களுக்கான உதவித்தொகை ஆகிய முக்கிய அறிவிப்புகள் முழுமையாக வெளியாகுமா அல்லது கட்டப்படியாக அமல்படுத்தப்படுமா என்பது ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் தெளிவாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.