மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு! தினமும் 100 பேர் வரை பாதிப்பு – அமைச்சர் எச்சரிக்கை!
தமிழகத்தில் காலநிலை மாற்றம் காரணமாக கொசுக்களின் உற்பத்தி அதிகரித்து, டெங்கு காய்ச்சல் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது தமிழகத்தில் தினசரி 100 பேர் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறினார். கடந்த திங்கள்கிழமை மட்டும் 79 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டில் இதுவரை டெங்கு காய்ச்சலால் 9 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது மிகவும் வேதனைக்குரியது என்றும் அமைச்சர் கூறினார். பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு வார்டுகள் அமைத்து, தேவையான சிகிச்சை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து பரவும் டெங்கு.. பீதியில் மக்கள்.. சிறார்களை கவனமாக பார்த்துக்கோங்க மக்களே.!

காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை பெற்றோர் அலட்சியப்படுத்தக் கூடாது என அமைச்சர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, காய்ச்சல் பாதிப்பு உள்ள குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
மேலும், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதுடன், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அகற்றி தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் காய்ச்சல் அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உரிய மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும், கொசு உற்பத்தியைத் தடுப்பதில் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!