கடனாக பணம் வாங்கியவர் பரிதவிப்பு: 45 நாட்களில் ரூ. 7.5 லட்சம் வசூலித்த வசூல் ராஜா..!

கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த முத்தாண்டிக் குப்பம் அருகேயுள்ள சின்ன ஒடப்பன் குப்பம் பகுதியை சேர்ந்தவர் செல்வழகன் ( 30) இவர் என்.எல்.சி-யில் ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர், அதேபகுதியை சேர்ந்த பந்தல் அமைப்பாளர் தனசேகரன் (33). என்பவரி டம் தனது குடும்ப செலவுக் காக ரூ. 3 லட்சம் கடனாக பெற்றுள்ளார்.
இந்த தொகையை கடனாக பெறுவதற்காக பூர்த்தி செய்யப் படாத 10 ஆவணங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் பின்னர், செல்வழகன் தான் பெற்ற கடன் தொகைக்கு நாளொன்றுக்கு 18 ஆயிரம் வீதம் 45 நாட்களில் தவணை முறையில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரத்தை திருப்பி கொடுத்துள்ளார். இதன் பிறகும் தனசேகரன் செல்வழகனிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, வாங்கிய தொகைக்கு மேலாக 2 மடங்கு பணம் செலுத்தியும் தனசேகரன் தன்னிடம் மேலும் பணம் கேட்டு மிரட்டுவதாக முத்தாண்டிக் குப்பம் காவல் நிலையத்தில் செல்வழகன்புகார் அளித்துள்ளார். கடலூர் மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பண்ருட்டி காவல் நிலைய ஆய்வாளர் சந்திரன், முத்தாண்டி குப்பம் காவல் நிலைய துணை ஆய்வாளர் ராஜாராம் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அதே ஊரைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் ஊழியரான ராமலிங்கம் என்பவரிடமும் தனசேகரன் கந்து வட்டி கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தனசேகரனை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து செல்வழகன் உள்ளிட்ட ஏராளமானோர் கொடுத்த ஆவணங்களை கைப்பற்றினர்.