அரசியல் தமிழகம்

உள்ளாட்சி மறைமுக தேர்தல்! வாக்கு எண்ணிக்கையில் சமநிலை! டி.எஸ்.பி-க்கு அரிவாள் வெட்டு!

Summary:

Dsp attacked in election result

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில்
மாவட்ட ஊராட்சித் தலைவர், ஒன்றியக் குழு தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. 

இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்கள் தேவை என்பதால் தலைவர் பதவியை பிடிப்பதில் அதிமுக, திமுக இடையே போட்டி நிலவுகிறது. 27 மாவட்டங்களில் இழுபறியாக உள்ள ஒன்றியங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம் நரிக்குடி ஒன்றியத்தில் இன்று தலைவர் பதவிக்கு மறைமுகத் தேர்தல் நடந்தது. அங்குள்ள 14 வார்டுகளில் தி.மு.க. 6-ஐயும், அ.தி.மு.க. 5-ஐயும் கைப்பற்றின. அ.ம.மு.க.-1 சுயேச்சைகள்-2 இடங்களை கைப்பற்றின.

நரிக்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க. சார்பில் பஞ்சவர்ணம் என்பவரும், தி.மு.க. சார்பில் காளீஸ்வரி என்பவரும் களம் இறங்கினர். அங்கு நடந்த வாக்கு எண்ணிக்கை முடிவில் 2 பேருக்கும் தலா 7 ஓட்டுகள் கிடைத்தது. இதனால் தலைவர் யார்? என்பதை தேர்ந்தெடுக்க குலுக்கல் முறை கடைபிடிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு அங்கு குழப்பமான சூழல் உருவானது. 

இதனையடுத்து யார் தலைவர் என்பதை நிர்ணயிப்பதில் பிரச்சனை ஏற்பட்டு வாக்குவாதம் உருவானது. இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அருப்புக்கோட்டை டிஎஸ்பி வெங்கடேசன் மோதலை தடுக்க முயற்சித்துள்ளார். 

இந்தநிலையில் திடீரென யூனியன் அலுவலகத்திற்கு  வந்த மர்ம கும்பல் கற்களை வீசி அங்குள்ள அலுவலக கண்ணாடிகளை உடைந்து நொறுக்கினர். பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி. வெங்கடேசனை அரிவாளால் வெட்டினர். பின்னர் சம்பவ இடத்திற்கு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து மர்ம கும்பல் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து நரிக்குடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


Advertisement