அரசியல் தமிழகம்

ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு மோதல்! சினிமாவை மிஞ்சிய தி.மு.க.வினரின் கோ‌‌ஷ்டி மோதல்!

Summary:

DMK party issue


புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணியின் மனைவி வள்ளியம்மைக்கும், திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞான.இளங்கோவனின் மனைவி ஆனந்திக்கும் இடையே போட்டி நிலவி வந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியத்தில் 25 ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. 14, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் 3 என 17 பேரும், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேரும், சுயேச்சை 2 பேரும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் பதவி ஏற்பதற்காக வந்தனர். பதவியேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு ஞான.இளங்கோவன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கமணியின் பாதுகாப்பில் இருந்த கோவிலூரை சேர்ந்த ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வெத்தியப்பனிடம் பேச முயற்சி செய்துள்ளனர்.

திருவரங்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர் தங்கமணி அவர்களுக்கு பெரும்பான்மையான ஒன்றிய கவுன்சிலர்களின் ஆதரவு இருப்பதால் அதனை திசை திருப்ப, திருவரங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஞான.இளங்கோவனின் ஆதரவாளர்கள் முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தங்கமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெத்தியப்பன் மற்றும் 2 சுயேச்சை கவுன்சிலர்களையும் காரில் ஏற்றிக்கொண்டு ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புறப்பட தயாராகினர். அப்போது ஞான.இளங்கோவனின் ஆதரவாளர்கள் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி கொண்டனர். இதில் பலருக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து சினிமா பாணியில் காரை வேகமாக ஓட்டிய தங்கமணியின் ஆதரவாளர்கள், ஒன்றிய அலுவலகத்தில் இருந்து வெத்தியப்பன் உள்ளிட்ட 3 கவுன்சிலர் களையும் ஏற்றி கொண்டு புறப்பட்டு சென்றனர்.

சினிமாவை மிஞ்சி அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டி கூட்டத்தை கலைத்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 


Advertisement