தளபதி 69 படத்தில் விஜய்க்கு ஜோடி இவரா? அப்செட்டில் ரசிகர்கள்!
ஒரு எம்.பி-க்கே கேட்டைத் திறக்கமாட்டியா? ரயில்வே கேட் கீப்பரை தாக்கிய அதிமுக எம்.பி!.
அதிமுகவைச் சேர்ந்த எம்பி உதயகுமாரின் சொந்த ஊர் நிலக்கோட்டை என்பதால் தினமும் திண்டுக்கல் சென்றுவருவது வழக்கம். நேற்று வழக்கம் போல் நிலக்கோட்டையில் இருந்து திண்டுக்கல் சென்றபோது அழகம்பட்டி என்ற இடத்தில் ரயில்வே கேட் மூடப்பட்டு இருந்தது.
அந்த நேரத்தில் மதுரை-திண்டுக்கல் ரயில் வரும் என்பதால் இரயில்வே கேட் கீப்பர் கேட்டை மூடியுள்ளார். கேட் மூடப்பட்டுள்ளதை கவனித்த எம்.பி ஆதரவாளர்கள் இறங்கி சென்று, 'எம்.பி அவசரமாக செல்ல வேண்டும் கேட்டை திறந்துவிடு என்று அதிகாரமாக கூறியுள்ளார்.
அதற்கு கேட் கீப்பர் மணிமாறன் ரயில் வரப்போவதால் தற்பொழுது கேட்டை திறக்க முடியாது என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. அதற்கு எம்பி உதயகுமார், ' நான் எம்பி சொல்கிறேன். கேட்டை திறந்து விட்டு அதற்கப்புறம் மூடு'' என்று கட்டளையிட்டுள்ளார்.
ஆனால் மணிமாறனோ, ''கேட்டை மூடினால் ரயில் வந்த சென்ற பின்னர்தான் திறப்போம். அதுதான் விதி முறை, அதை மீறி திறக்க முடியாது'' என்று கூறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த அதிமுக எம்பி உதயகுமார் எங்களையே எதிர்த்து பேசுகிறாயா என்று எம்.பி கேட் கீப்பரை தாக்கியுள்ளார்.
மேலும் அவரது ஆதரவாளர்களும் கிழே தள்ளி அவரை அடித்துள்ளனர். இதனால் கேட் கீப்பருக்கு உடலில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் டென்ஷன் ஆன மணிமாறன் ரயில்வே ஊழியர்களை வரவழைத்து ரயில்வே கேட்டை மூடாமல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனால் மதுரையில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற பயணிகள் ரயில், பாதியில் நின்றது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரயில்வே ஊழியர்கள் மற்றும் மணிமாறனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள், ஆனாலும் ரயில்வே ஊழியர் சமாதானம் ஆகவில்லை.
ரயில்வே ஊழியர்கள் போராட்டம் செய்வதை அறிந்த உதயகுமார், தனக்கு எந்த பிரச்சனையும் வந்து விடக்கூடாது என கருதி, கேட் கீப்பர் தாக்கியதால் தனக்கு நெஞ்சில் காயம் ஏற்பட்டதாக கூறி, திண்டுக்கல்லில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த உதயகுமார் பின்னர், மதுரை சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.