ஆசியக் கோப்பையை பெற மறுத்த இந்திய மகளிர் அணி.. பரிசளிப்பு விழாவில் பரபரப்பு.. தொடரும் சர்ச்சை!



womens-negotiate-asia-cup-trophy

துபாய் மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கையை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி 8வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. ஆனால், போட்டிக்குப் பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஆசியக் கோப்பையை பெற்றுக்கொள்ள இந்திய அணி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் (PCB) தலைவருமான மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற இந்திய அணி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த முடிவு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான (BCCI) உத்தரவின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் அமோல் மஜும்தார் தெரிவித்தார். 

சாம்பியன் பட்டத்தை வென்றதே தங்களுக்கு போதுமானது என்றும், பிசிசிஐயின் முடிவுக்கு இந்திய அணி முழுமையாக ஆதரவு அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதையடுத்து, ACC துணைத் தலைவர் காலித் அல் ஜரூனி அல்லது வெற்றி பெற்ற அணியின் பிரதிநிதி மூலம் கோப்பையை வழங்குவது உள்ளிட்ட மாற்று ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: 8 மணிக்கு தொடங்கும் அதிரடி ஆட்டம்! கோப்பையை வெல்ல இந்தியா–இலங்கை பலப்பரீட்சை!

ஆனால், மொஹ்சின் நக்வி தாமே கோப்பையை வழங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. இரு தரப்புக்கும் இடையே உடன்பாடு ஏற்படாததால், கோப்பை வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதையடுத்து பரிசளிப்பு விழாவின் நேரலை ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக, 2025-ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியிலும் இந்திய அணி, மொஹ்சின் நக்வியிடமிருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மகளிர் ஆசியக் கோப்பை தொடரிலும் அதே விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: மகளிர் ஆசியக் கோப்பை: இன்று இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை!