24 ஆவது சதத்தை கடந்த விராட்; சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பண்ட்; வலுவான நிலையில் இந்தியா..!!

24 ஆவது சதத்தை கடந்த விராட்; சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பண்ட்; வலுவான நிலையில் இந்தியா..!!



kholi 24th century

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கு இந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இந்திய டெஸ்ட் அணியின் 293 வது வீரராக அறிமுகமாகியுள்ள பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கப்ரியல் வீசிய முதல் ஓவரில் எல்.பி.டபல்யூ முறையில் டக் அவுட் ஆகி கே.எல்.ராகுல் வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய புஜாரா மற்றும் பிரித்வி ஷா ஜோடி மேற்கு இந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சை நாலா புறமும் சிதறடித்தனர். இதனால், இவர்களின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினர். 

அறிமுகப்போட்டி என்ற பதற்றமே இல்லாமல் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதம் அடித்து ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம் அறிமுகப்போட்டில் சதமடித்த 15-வது வீரர் எனும் பெருமையை அவர் பெற்றார்.

kholi 24th century

சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புஜாரா 86 ரன்கள் அடித்திருந்த நிலையில் லீவிஸ் வீசிய பந்தில் விக்கெட்கீப்பர் டோவ்ரிச்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு புஜாரா-ஷா ஜோடி 208 ரன்கள் குவித்தது. அணியின் எண்ணிக்கை 232 ஆக இருந்த போது 134 ரன்கள் அடித்திருந்த பிரித்வி ஷா பிஷோ வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். பின்னர் களமிறங்கிய ரகானே 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 89 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 364 ரன்கள் குவித்தது.

இரண்டாம் நாள் ஆட்டத்தை விராட் கோலி 72  ரன்களுடனும், ரிஷப் பண்ட் 17 ரன்களுடனும் துவங்கினர். ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் அரைசதத்தை கடந்தார். அதனைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 24 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.

kholi 24th century

மிகவும் அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் சதத்தை கடப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் 92 ரன்கள் எடுத்திருந்தபோது பிசு பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். இவர் 84 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்களுடன் 92 ரன்கள் எடுத்திருந்தார். 

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஜடேஜா கேப்டன் கோலியுடன் இணைந்து நிதானமாக ஆடி வருகிறார். தற்போதைய நிலவரப்படி இந்திய அணி 117 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 502 ரன்கள் எடுத்துள்ளது. கோலி 120 ரன்களுடனும் ஜடேஜா 16 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.