இடைத்தேர்தலில் கடும் போட்டி..! ஆட்சியைத் தக்கவைக்குமா ஆளும் கட்சி..? 7 தொகுதிகளில் வெடிக்கப் போகும் யுத்தம்..! தவெகவுக்கு எதிராக திமுக போடும் மாஸ்டர் பிளான்..!!!
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மாநில அரசியல் களம் இடைத்தேர்தலை நோக்கி நகர்ந்து வருகிறது. அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து தவெக-வில் இணைந்தது, கொளத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. வி.எஸ்.பாபு காலமானது உள்ளிட்ட காரணங்களால் தற்போது 6 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. இந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
6 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு
கொளத்தூர் தொகுதி தவிர, மற்ற 5 தொகுதிகளில் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளில் விரைவில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீதிமன்றத்தின் இறுதி முடிவு இடைத்தேர்தல் நடத்துவதற்கு சாதகமாக அமையும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
அடுத்த ஆண்டு உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஜனவரி மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடைத்தேர்தல் பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம்
இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் கட்சிகள் தங்களது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. முதலமைச்சர் விஜய் அண்மையில் காலியாக உள்ள பெருந்துறை மற்றும் விராலிமலை தொகுதிகளுக்குச் சென்று வந்துள்ளார். தனிப்பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி நடத்தி வரும் தவெக, இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது அரசின் நிலைத்தன்மைக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
மறுபுறம், ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்க திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றன. கொளத்தூர் அல்லது கரூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடக்கூடும் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன.
கள்ளக்குறிச்சி தொகுதியும் இடைத்தேர்தல் பட்டியலில் சேருமா?
இதற்கிடையில், பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக புகாரில் சிக்கியுள்ள கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், தனது பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அவர் ராஜினாமா செய்தால், இடைத்தேர்தல் நடைபெற வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர வாய்ப்புள்ளது.
எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள், அரசியல் சவால்கள் என பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தவெக அரசு இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுவதால், தமிழக அரசியல் களத்தில் இடைத்தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: 5 தொகுதி இடைத்தேர்தலில் சிக்கலில் சிக்கி தவிக்கும் அதிமுக! CM விஜய் பிளான் போட்டு காயை நகர்த்தியதால் திணறும் எடப்பாடி...!!!