4 மணி நேர அதிரடி ரெய்ட்டில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய பிறகு முன்னாள் அமைச்சர் மூர்த்தி சொன்ன பகீர் பதில்! அரசுக்கு 5 கோடிக்கு மேல் இழப்பு... பெரும் பரபரப்பு!!!
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக செம்மண் மற்றும் சரளைக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக எழுந்த புகாரில், முன்னாள் அமைச்சர் மூர்த்தியின் வீட்டில் காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் சோதனை நடத்தினர். மதுரை ஐயர் பங்களா அருகேயுள்ள எழில் நகர், ரோஜா வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் அதிகாலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை, 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.
2019 முதல் 2025 வரை அரசு அனுமதித்த அளவை விட அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.5.39 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட 4 பேர் மீது மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: BREAKING: சர்ச்சை வழக்கில் சிக்கிய முன்னாள் அமைச்சர் பொன்முடி விடுதலை! கொண்டாடத்தில் திமுகவினர்..!!!
ரூ.5.39 கோடி வருவாய் இழப்பு புகார்
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் சத்திரவெள்ளாளப்பட்டி பகுதியில் முன்னாள் அமைச்சர் மூர்த்திக்குச் சொந்தமான பட்டா நிலம் மற்றும் அனுமதி பெறாத இடங்களில், 2019 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் அரசு அனுமதித்த அளவை மீறி செம்மண் மற்றும் சரளைக் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு சுமார் ரூ.5 கோடியே 39 லட்சம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கனிமவளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களின் புகாரின் அடிப்படையில் முன்னாள் அமைச்சர் மூர்த்தி, ராஜாமணி, அனந்தகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் மீது மதுரை மாவட்ட மத்திய குற்றப்பிரிவு போலீசார் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர்.
மூர்த்தி வீட்டில் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை
இதன் தொடர்ச்சியாக, துணை காவல் கண்காணிப்பாளர் பொன்னரசு தலைமையிலான காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் இன்று அதிகாலை 6 மணி முதல் மூர்த்தியின் வீட்டில் சோதனை நடத்தினர். சட்டவிரோத குவாரி தொடர்பான ஆவணங்கள், பணப் பரிவர்த்தனை விவரங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுபோல சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் உள்ள மூர்த்தியின் மைத்துனர் ராஜாமணி வீட்டிலும், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள உறவினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகளின் வீடுகளிலும் ஒரே நேரத்தில் சோதனை நடைபெற்றது. 5-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
வீட்டு முன்பு திரண்ட திமுக தொண்டர்கள்
சோதனை நடைபெறும் தகவல் பரவியதும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் மணிமாறன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடேசன், வழக்கறிஞர்கள் மற்றும் திமுக தொண்டர்கள் மூர்த்தியின் வீட்டின் முன்பு திரண்டனர். அசம்பாவிதங்களைத் தவிர்க்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
வீட்டிலிருந்து வெளியே வந்த மூர்த்தி, வழக்கறிஞர்களிடம் பேசும்போது, தனக்குக் குவாரியே இல்லாத நிலையில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படுவதாக தெரிவித்தார். மேலும், அங்கு காத்திருந்த தொண்டர்களுக்கு தேநீர் மற்றும் இருக்கை வசதிகளையும் ஏற்பாடு செய்தார்.
சோதனைக்கு இடையே மூர்த்தி அருகிலுள்ள மற்றொரு வீட்டிற்கு நடந்து சென்றபோது, அங்கு திரண்டிருந்த திமுக தொண்டர்கள் காவல்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் கோபமடைந்த மூர்த்தி, யாரும் கத்தாமல் அமைதியாக இருக்குமாறும், தேவையில்லாமல் தன்னை எந்த விவகாரத்திலும் இழுத்துவிட வேண்டாம் என்றும் கூறி தொண்டர்களைக் கடிந்து கொண்டார். சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனைக்குப் பிறகு அதிகாரிகள் கைப்பற்றிய ஆவணங்களுடன் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க: சட்டமன்றதுக்குள் ஸ்டாலின் நுழைவாரா..? பலத்தை நிரூபிக்குமா ஆளும் கட்சி..! கொளத்தூரில் நடக்கப்போவது என்ன? CM விஜய்யின் மாஸ்டர் மூவ்..!!!