பல வருஷ காத்திருப்பு.! குழந்தைக்காக 13 லட்சம் வரை செலவு... 2 நாட்களில் 20 பாக்கெட் ரத்தம்! இருந்தும் தாயின் உயிர் பிரிந்த கொடூரம்... நெஞ்சை உலுக்கும் பகீர் பின்னணி!!!
தெலங்கானா மாநிலம் விக்காராபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது பெண், பல ஆண்டுகள் காத்திருந்த பிறகு குழந்தை பெற்றெடுத்த நிலையில் உயிரிழந்தார். கம்மத்தில் உள்ள பிளீஃப் மருத்துவமனையில் பிரசவம் நடந்த நிலையில், ஏற்பட்ட கடும் ரத்தப்போக்கை கட்டுப்படுத்த முடியாமல் அவர் பரிதாபமாக இறந்தார். மருத்துவர்களின் அலட்சியமே மரணத்துக்கு காரணம் என குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
குழந்தைக்காக ரூ.13 லட்சம் வரை செலவு
தாண்டூர் மண்டலத்தைச் சேர்ந்த கௌடி லட்சுமி, குழந்தைப் பேறுக்காக பல ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்காக IUI மற்றும் IVF சிகிச்சைகளுக்கு மட்டும் குடும்பத்தினர் சுமார் ரூ.10 லட்சம் செலவிட்டதாக கூறப்படுகிறது. பிரசவத்துக்காக மேலும் ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளனர்.
நீண்ட சிகிச்சைக்குப் பிறகு லட்சுமி கர்ப்பமான நிலையில், கம்மத்தில் உள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். குழந்தை பிறந்த பின்னர் அவருக்கு திடீரென கடும் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமடைந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இரண்டு நாட்களில் 20 பாக்கெட் ரத்தம்
ரத்தப்போக்கு அதிகமாக இருந்ததால் இரண்டு நாட்களில் லட்சுமிக்கு சுமார் 20 பாக்கெட் ரத்தம் செலுத்தப்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே, அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் ஹைதராபாத்துக்கு மாற்றி மேல்சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டதாகவும், அதற்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
தொடர்ந்து, உயிரைக் காப்பாற்றும் முயற்சியாக லட்சுமியின் கர்ப்பப்பை அகற்றப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
மூன்று மருத்துவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார்
லட்சுமியின் மரணத்துக்கு மருத்துவர்கள் ரோஹித், விஜய் மற்றும் ஸ்ருதி ஆகியோரின் அலட்சியமே காரணம் எனக் கூறி அவரது குடும்பத்தினர் கம்மம் ஒன் டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக எதிர்பார்த்த குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே தாயை இழந்துள்ளதால் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். தாயின் முகத்தைக் கூட அறியாத நிலையில் பிஞ்சுக் குழந்தை இருப்பது உறவினர்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: அடக்கடவுளே! கழுத்து வலிக்கு மசாஜ் செய்ய போன பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்! கதறும் குடும்பத்தினர்... நெஞ்சை உலுக்கும் சோகம்..!!!