மகாராஷ்டிராவில் ஒருவர் பின் ஒருவராக மாயம்... நடந்தது என்ன.? காவல்துறை விசாரணை.!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கணவன் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் திடீரென மாயமான சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக ஊர் மக்களும் காவல்துறையினரும் அவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் ரத்தினகிரி மாவட்டத்தில் உள்ள விசாப்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் பரத் பாலேகர்(34). இவர் கடந்த இரண்டாம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமானார். விறகு எடுத்து வருவதாக சொல்லி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.. பரத் அடிக்கடி இதே போன்று சொல்லாமல் வெளியே எங்கேயாவது சென்று விடுவதால் அவரது மனைவியும் அவரை தேடவில்லை.
மூன்றாம் தேதி பரத்தின் மனைவி சுகந்தா தனது இரண்டு குழந்தைகளையும் பள்ளியில் விட்டு வருவதாக சென்றவர் வீடு திரும்பவில்லை .மேலும் மாலையில் குழந்தைகளும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
சுகந்தாவை பற்றி அவரது உறவினர்கள் மற்றும் தோழிகளின் வீட்டிலும் விசாரித்து வருகின்றனர். இந்த நான்கு பேருக்கும் விபத்து அல்லது ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றதா? என்பது தொடர்பாகவும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். காவல்துறையினருடன் இணைந்து ஊர் பொதுமக்களும் இவர்களை தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் அடுத்தடுத்து நாட்களில் மாயமாக இருக்கும் சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.